தீரா காதல் ; விமர்சனம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி, அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் தீராக் காதல். ரோகின் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கதை மற்றும் திரைக்கதையை ரோகின் வெங்கடேசன் மற்றும் சுதேர்ந்தர்நாத் கவனித்துள்ளனர்.

கல்லூரிப் பருவக் காதலர்களான கவுதம் (ஜெய்), ஆரண்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) இருவரும் ஒரு ரயில் பயணத்தில் யதேச்சையாக, சந்தித்துக்கொள்கிறார்கள். கவுதமுக்கு அன்பான மனைவியும் (ஷிவதா), அழகான குழந்தையும் (விருத்தி விஷால்) அமைந்திருக்க, ஆரண்யாவுக்கோ கொடுமைக்காரக் கணவர் (அம்ஜத் கான்) வாய்க்கிறார்.

மங்களூருவில் பணி நிமித்தமாக சில நாள்கள் தங்கியிருக்கும் கவுதமும் ஆரண்யாவும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதால் அவர்களுக்கிடையிலான காதல் புத்துயிர் பெறுகிறது. அது எல்லை மீறுவதற்கு முன் இருவரும் விலகி, இனி சந்திக்கவே கூடாது என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் சென்னை திரும்பியதும் ஒரு சிறிய பிரச்சினைக்காகத் தன்னை அடித்துத் துன்புறுத்தும் கணவரை விட்டு விலகி மீண்டும் கவுதமின் வாழ்க்கையில் நுழைகிறார் ஆரண்யா. குடும்பத்தைப் பிரிய விரும்பாத கவுதம் தனித்துவிடப்பட்ட முன்னாள் காதலியையும் முற்றிலும் ஒதுக்க முடியாமல் தவிக்கிறார். இந்த ஊசலாட்டத்தால் கவுதமின் குடும்ப வாழ்க்கைப் பாதிக்கப்பட்டதா? இறுதியில் ஆரண்யாவுக்கு என்ன ஆகிறது? என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.

கதையின் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக பொருந்தியிருக்கிறார் ஜெய். அப்பாவியான முகம், மாட்டிக் கொண்டும் முழிப்பது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் தவிப்பு, காதல், பாசம் என பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

முன்னாள் காதலியாக, தனது காதலை மீண்டும் புதுப்பிக்கும் தருணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் க்யூட். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குடும்பத்தை பார்க்காமல் தனக்காக யோசித்து முடிவெடுக்கிறாரே என்று வில்லியாக நகரும் இடத்தில் தனக்கான வலியை கூற வைத்து ஸ்கோர் அடித்து கதையை மெதுவாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன்.

திருமணத்திற்கு பிறகு முன்னாள் காதலர்கள் சந்தித்தால் அவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக கூறியுள்ளார் இயக்குனர்.

பல படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும், ஒரு அழகான வாழ்க்கை பயணத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர்.