மாமன்னன் ; விமர்சனம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மாமன்னன்.

சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் ஆண்டுகள் கடந்தும் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வாரிசு அரசியல்வாதியாக ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் அண்ணன் அடித்துநொறுக்க பிரச்சினை அரசியலாகிறது. அந்த அரசியலில் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி எளியவர்களின் உரிமைகளை அடக்கத் துடிக்கிறார்கள் என்பதை தற்போதைய சாதிய அரசியலை மையப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதே ‘மாமன்னன்’ படத்தின் திரைக்கதை.

மாமன்னனாக வரும் வடிவேலு மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி நிற்கிறார். அவருக்கு எந்த வகையிலும் குறையே இல்லாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் ஃபகத் ஃபாசில். இருவருமே போட்டி போட்டு நடித்து உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை நாம் நகைச்சுவையாக பார்த்த வடிவேலு முற்றிலும் மாறி வேறொரு பரிமாணத்தில் நடித்து நம்மை வியக்க வைத்துள்ளார்.

உதயநிதி தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார். கோவக்கார இளைஞனாக அவரின் நடிப்பு அருமை. கீர்த்தி சுரேஷுக்கு படம் முழுக்க பயணிக்கும் முக்கிய கதாப்பாத்திரம், அவரும் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுடன் லால், ரவீனா ரவி, அழகம் பெருமாள், என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

மாரி செல்வராஜ் படத்தில் எதிர்பார்க்கப்படும் அனைத்தும் மாமன்னன் படத்தில் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை காட்சிகள், காதல், மனிதத்தன்மையே இல்லாத வில்லத்தனம், பயங்கரமான ஹீரோயிசம் என எல்லாமே இருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்திற்கு பக்கபலம்.

மொத்தத்தில் ‘மாமன்னன்’ அரியணை ஏறினான்