வளர்ச்சி குறைபாடுள்ள நாயகன் வெங்கட் செங்குட்டுவன், அப்படிப்பட்ட மனிதர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் கேலி கிண்டல்கள் மற்றும் அவமானங்களை எதிர்கொண்டாலும், அவற்றை புறம் தள்ளிவிட்டு தனது புத்திசாலித்தனத்தால் காவல்துறை கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்ற பின்னணியையும், குற்றவாளியையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.
நெடுமாறனாக வெங்கட் செங்குட்டுவன் கதாபாத்திரத்திற்கேற்ற தேர்வு, அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவனிக்க வைக்கிறார். தன் உயரத்தை பார்த்து கிண்டல் செய்பவர்களை கண்டும் காணாமல் இருப்பதும், சில சமயங்களில் தக்க பதிலடி கொடுப்பதும் தன் சாதுர்யமாக துப்பறியும் அறிவை பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறனும், என்று படம் முழுவதும் நிறைவாகவும், நேர்த்தியாகவும்,நடனத்திலும்;, நடிப்பிலும் அசத்தலாக செய்துள்ளார்.
நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இவானா படத்தின் பெரும்பலம்.அவருடைய வேடமும் காட்சிகளும் திரைக்கதைக்கு வலுச்சேர்க்கின்றன.அன்பான குடும்பத்தைத் தாண்டி வந்துவிட்டு அவர் படும் துயரங்களும் அதைத் தன் நடிப்பால் காட்டியிருக்கும் விதமும் நன்று.
நாயகியாக வரும் ஆராத்யா, காவலதிகாரியாக நடித்திருக்கிறார். காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் நெகிழ்வு.நாயகனோடு இணைந்து துப்புதுலக்கும் காட்சிகளில் இயல்பாகப் பொருந்தியிருக்கிறார்.
வெங்கட் செங்குட்டுவனின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார்.இ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
கார்த்திக்ராஜாவின் இசையில் கத்திக்கூவுது காதல் உள்ளிட்ட பாடல்கள் சுகம். பின்னணி இசையில் காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக்கிறார். பர்வேஸ் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகளும் நகரத்துக்காட்சிகளும் மிக இயல்பாக அமைந்துள்ளன.
அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். பாடி ஷேமிங் என்கின்ற விசயத்தை எடுத்துக் கொண்டு கதையாகச் சொன்ன விதம் அழகு. குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, அதனுடன் ஒரு கிரைம் திரில்லர் கதையை சேர்த்து சொல்லிய விதம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.