நந்திவர்மன் ; விமர்சனம்


செஞ்சியில் இருக்கக்கூடிய அனுமந்த புரம் என்கிற கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் வந்தால், அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அதே சமயம் செல்ல முடிவெடுக்கிறார்கள். அந்த ஊரில் பல்லவ அரசன் நந்திவர்மன் கட்டிய சிவன் கோவில் மண்ணில் புதைந்திருக்கிறது என்பதை அறிந்து, அதனை தோண்டியெடுக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனுமந்த புரத்திற்கு செல்கிறார்கள்.

அவர்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் குரு செல்கிறார். அங்கு சென்ற பிறகு இவர்கள் பூமியில் தோண்ட தோண்ட அங்கு ஒவ்வொரு பிரச்சனையாக வெடிக்கிறது. மற்றும் ஊர் மக்களும் மர்மமான முறையில் இறக்கின்றனர். கடைசியில் இந்த பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதும், மக்கள் மர்மமான முறையில் இறப்பதற்கு காரணமும், இந்த பிரச்னையெல்லாம் தாண்டி நந்திவர்மன் கோவிலை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை

நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் ஒவ்வொரு ரகம் கொண்டதாக தேர்வு செய்கிறார். அந்த வகையில், கதைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து, தன்னை முழுமையான நாயகன் என்று நிரூபித்திருக்கிறார்.

ஆஷா வெங்கடேஷ் தொல்லியல்துறை மாணவியாகவும், காதலியாகவும் முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளார். காதல் மட்டுமின்றி கடினமான காட்சிகளின் உணர்வுகளையும் முகபாவங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்

ஆராய்ச்சிக்கு உதவும் அதிகாரியாக நல்ல மனிதராக போஸ் வெங்கட்,தொல்லியல்துறை உயர் அதிகாரி வில்லன் சக்கரவர்த்தியாக நிழல்கள் ரவி, ஊர்தலைவர் தர்மராஜாகவும் மற்றும் ஒரு வில்லனாகவம் கஜராஜ், உயர் போலீஸ் அதிகாரி பழனிவேல் ராயனாக மீசை ராஜேந்தர், ஜேசிபி மணியாக ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், குடிகாரராக கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து எளிமையான லொக்கேஷன்களை கூட பயங்கரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பழங்காலத்து கோவில்களையும், மலைப்பகுதிகளையும் காட்சிப்படுத்திய விதம் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தடையின்றி பின்னிப் பிணைந்த ஒரு நன்கு சித்தரிக்கப்பட்ட சிந்திக்க வைக்கும் கதைக்களத்தை கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜி.வி. பெருமாள் வரதன். மிகப்பெரிய பொருட்ச் செலவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதையை இப்படி ஒரு பட்ஜெட்டில் எடுத்ததே மிகப்பெரிய வியப்பாக இருக்க, பல அறிய தகவல்களுடன், கதையை மிக நேர்த்தியாக சொல்லி இரண்டு மணி நேரம் ரசிகர்களை கட்டிப்போடும் மாயாஜாலத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன்.