மை டியர் பூதம் ; திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த குறையை தீர்ப்பதற்கு வெளியாகியுள்ளது இந்த மை டியர் பூதம்.

மஞ்சப்பை, கடம்பன் படங்களை இயக்கிய ராகவனின் இயக்கத்தில், பிரபுதேவா, அஸ்வத், ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் மை டியர் பூதம்.

வேறு உலகத்தில் பூதங்களின் தலைவராக வாழ்கிறார் பிரபுதேவா. முனிவரின் சாபத்தால் தன் மகனை பிரிந்து பூமியில் சிலையாக இருக்கும் நிலை பிரபுதேவாவுக்கு ஏற்படுகிறது. திக்குவாய் பிரச்சனையால் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாகும் சிறுவன் அஸ்வத் பூதத்தை விடுதலை செய்கிறான்.

ஆனால் பிரபுதேவா தன் உலகத்திற்கு திரும்பி செல்ல அந்த சிறுவன் ஒரு காரியம் செய்ய வேண்டும், அதை அவன் செய்தானா? பிரபுதேவா தன் உலகத்திற்கு திரும்பினாரா? அந்த சிறுவனின் மன அழுத்தம் நீங்கியதா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாக உள்ளது. குழந்தைகளின் உலகிற்கு சென்று அவர்கள் ரசிக்கும் விஷயங்களை காட்சிகளாக அமைத்துள்ளார் இயக்குனர் ராகவன்.

பூதமாக நடித்திருக்கும் பிரபுதேவாவை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்த படத்திற்காக மொட்டை அடித்து நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பூதமாக நடித்திருக்கும் பிரபுதேவாவை நிச்சயம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

சூப்பர் டீலக்ஸ் புகழ் அஸ்வத், திக்குவாய் சிறுவனாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். அஸ்வத்தின் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

கதையாக புதிதாக எதுவும் இல்லை என்றாலும் காட்சி அமைப்புகளில் சுவாரசியத்தை கூட்ட முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது.

குழந்தைகள் நிச்சயம் இந்த மை டியர் பூதத்தை விரும்புவார்கள்.