வட்டார வழக்கு ; விமர்சனம்


மதுரை மாவட்டத்தில் உள்ள தோடநேரி கிராமத்தில் இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருடங்களாக பகை நிலவி வருகிறது. இந்த பகை கொலை செய்யும் நிலைக்கு செல்கிறது. இதனால் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியில் இன்னொரு குடும்பத்தினர் இருக்கின்றனர். இந்த இரு குடும்பங்களிடையே நிலவும் சம்பவங்களை தொகுத்து சொல்லப்பட்டது தான், வட்டார வழக்கு

மதுரை மண் கமழும் வட்டார மொழி பேசி ஊரையே அதிர வைக்கும் இளைஞன்; செங்கை மாறனாக சந்தோஷ் நம்பிராஜன். மிக இயல்பாக நடித்திருப்பதோடு, கடும்கோபம் மற்றும் காதலை மிக இயல்பாக கடத்தும் விதத்தில் அசத்துகிறார்.

ரவீனா ரவி “தொட்டிச்சி”யாக கண்களால் காதலை சொல்லி அழகு கிராமத்து தேவதையாக தன் செயல்களால் கவர்ந்து, இறுதியில் கண் கலங்க செய்து விடுகிறார். கிராமத்துப்பெண்ணின் துடுக்குத்தனம் மட்டுமின்றி ஆக்ரோசத்தையும் அழகாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்

விஜய் சத்யா “போத்தண்ணன்”, பருத்திவீரன் வெங்கடேஷ் “தேசிங்கு”,”கண்ணு சேர்வை”யாக விஜி, சுப்பிரமணியபுரம் விசித்திரன் “தகரு”,‘பூபாண்டி”யாக ஜெட் பிரசன்னா, முருகேசன் “தொட்டால்”,ஈஸ்வரன் “ஏனல்” என்று கிராமத்து பெயர்களுக்கு ஏற்றாற்போல் கிராமத்து மனிதர்களாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இளையராஜாவின் இசையில் காதல் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. அதிலும், 1987 ம் காலக்கட்டத்தில் கதை நடப்பதால், அப்போதைய இளையராஜாவின் பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது காட்சிகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன், டோனி சான் ஆகியோரின் ஒளிப்பதிவு படதிற்கான பலம். கிராமத்தின் அழகினை அப்படியே படம்பிடித்துள்ளனர்.

இப்போதைய தலைமுறைக்கு, பங்காளிச்சண்டை அதன் வைராக்கியம் அதனால் நடக்கும் கொலைகள் ஆகியன புதிதாக இருக்கும். அதைத்தர முயன்றிருக்கிறார் வட்டாரவழக்கு பட இயக்குநர் கண்ணுசாமி இராமச்சந்திரன். 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 80களில் நடப்பது போல், அதேசமயம் வழக்கமான சினிமா பாணியிலான படமாக அல்லாமல் மக்களின் வாழ்வியலை சொல்லும் எதார்த்த படைப்பாக வட்டார வழக்கு படத்தை கொடுத்ததற்காக இயக்குனரை தாரளமாக பாராட்டலாம்.