இந்தியா சுதந்திரமடைவதற்கு முந்தைய காலகட்டம். அந்த பிரமாண்ட சமஸ்தானத்தை ஆள்கிற ராணி மல்லிகா ஷெராவத், தான் பாம்பு கடித்து மரணமடைவோம் என்பதையறிந்து அந்த பகுதியிலுள்ள ஒட்டுமொத்த பாம்புகளையும் கொன்றழிக்க உத்தரவிடுகிறார். பாம்புகள் கொத்துக் கொத்தாய், கூட்டம் கூட்டமாய் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. பிடியில் சிக்காத பாம்பொன்று மகாராணியை பரலோகத்துக்கு அனுப்பி வைக்கிறது. அந்த பாம்பால் மகாராணியின் மகளுக்கும் ஆபத்து என்பதால் அந்த ராஜ குடும்பம் சமஸ்தானத்தை விட்டு வெளியேறுகிறது.
அந்த அரண்மனையில் ராணியின் ஆவி சுற்றுவதாகவும், ராணியைக் கொன்ற பாம்பு அங்கேயே வசிப்பதாகவும் ஊர் முழுக்க பேசிக் கொள்ள, காவல்துறை அதிகாரி ஜீவன் அரண்மனைக்கு வருகிறார். அங்கு நிலவும் மர்மங்களின் பின்னணியை அலசி ஆராய்கிறார். முன்னர் நடந்தது, அப்போது நடப்பது, அடுத்து நடக்கப் போவது என அனைத்தையும் அறிந்துகொள்கிறார். அந்த ராட்சத பாம்பை கொல்லவும் துணிகிறார். இறுதியில் ஜீவன் அந்த ராட்சத பாம்பை கொன்றாரா? ஜீவன் அந்த அரண்மனைக்கு வர காரணம் என்ன? ராணி மல்லிகா ஷெராவத்தின் ஆவி உண்மையில் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஜீவன் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரங்களில், தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார் இருவருக்குமான. தோற்றத்திலிருக்கும் முதிர்ச்சி கவனிக்க வைக்கிறது. இரு வேடங்களுக்கான நடிப்பிலும் நல்ல தேர்ச்சி.
ராணியாக வருகிற மல்லிகா செராவத் கம்பீரத் தோற்றத்துடன் வந்து ஆங்காங்கே நடிப்பில் மிரட்டி விட்டு சென்றிருக்கிறார். இளவரசியாக வருகிற ரித்திகா சென் பயமும் பதட்டமும் கொண்ட நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
சுமன், ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, சரவண சக்தி, பருத்தி வீரன் சரவணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ். ஒரு சில இடங்களில் இரச்சலையும் கொடுத்து இருக்கிறார். இனியன் ஜெ ஹாரிஸின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
ராஜ வம்சத்தை சுற்றி நடக்கும் மர்மத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வடிவுடையான். சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அரண்மனை, ராட்சத பாம்பு என பிரம்மாண்டமாக கொடுக்க நினைத்து இருக்கிறார் இயக்குனர் கதைக்களத்தை நன்றாக கொண்டு சென்றிருக்கிறார். முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் நிறைய திருப்பங்களை இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.