நினைவெல்லாம் நீயடா ; விமர்சனம்


நினைவெல்லாம் நீயடி என்று சொலும் அளவுக்கு நாயகன் பிரஜன் கடந்து போன தனது பள்ளிக் காதலி யுவலட்சுமியின் நினைவாகவே வருடக் கணக்கில் மணமாகாமல் வாழ்கிறார். அவர் காதலி வெளிநாட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் பிரஜனின் முறைப் பெண் மனிஷா யாதவ் சதாசர்வ காலமும் பிரஜனிடம் நினைவெல்லாம் நீ மட்டும்தான்டா என்று அவரையே சுற்றிச் சுற்றி வருகிறார்.

ஒரு கட்டத்தில் மனிஷா தற்கொலைக்கே போக, வேறு வழியில்லாமல் அவரையே திருமணம் செய்து கொள்ளும் பிரஜன் பழைய காதலி மீண்டும் வந்து, அவளுக்குத் திருமணமும் ஆகாமல் இருந்தால் செத்துப்போய் விடுவேன் என்று ஒரு கண்டிஷன் போடுகிறார். அந்தக் காதலி திரும்பி வருகிறார். பிரஜனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்து அவரும் தற்கொலைக்கு முயல இதில் யார் தப்பிப் பிழைக்கிறார்கள் என்பது கதை.

நாயகனாக பிரஜன் காதலியின் வருகைக்காக காத்திருந்து சூழ்நிலை மற்றும் வற்புறுத்தலின் காரணத்தால் மாமன் மகளை மணந்து, வாழப் பிடிக்காமல் காதலியை மறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மாமனை காதலித்து, போராடி மணம் முடித்து பின், மணவாழ்க்கையில் மாமனுடைய அன்பு கிடைக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகான மனிஷா யாதவ் அற்புதமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.

இளம் வயது நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ரோஹித், யுவலட்சுமியும், அபிநய நட்சத்திரா, தண்டபாணி ஆகியோர் இயல்பான நடிப்பில் பள்ளி மாணவர்களாக வாழ்ந்திருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து வரும் மலர்விழி கதாபாத்திரத்தில் சினாமிகா தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசைக்குப் பேர் போன ஞானியிடம் இதில் ஈர்ப்பு குறைவாகவே இருக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் காமிரா அழகு சேர்த்து இருக்கிறது.

முதல் காதல் என்பது யாராலும் மறக்க முடியாதது தான். அதை வைத்து பல கதைகள் வந்து இருந்தாலும், காதல், ஏக்கம், சுகம், துக்கம் என அனைத்தையும் கலந்து திடீர் திருப்பங்களுடன் கதையை தந்து இருக்கிறார், டைரக்டர் ஆதி ராஜன். காதல் போயின் சாதல் என்கிற கருத்துக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.முதல்காதல் கைகூடவில்லையெனினும் அதைக் கடந்து ஒரு பெரிய வாழ்வு இருக்கிறது என்பதை விரல்நீட்டிச் சொல்லாமல் மனதில் பதிய வைத்திருக்கிறார்