வித்தைக்காரன் ; விமர்சனம்


திருட்டு தொழில் செய்து வந்த ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ஆகியோர் தனித்தனியாக பிரித்து தொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் ஆனந்தராஜ், தங்கம் கடத்துவதற்கு நாயகன் சதீஷ் உதவி செய்கிறார். ஆனால் அது முடியாமல் போகிறது. இந்நிலையில் விமான நிலையத்தில் ரூபாய் 25 கோடி மதிப்புள்ள வைரத்தை மதுசூதனன் கடத்துவதை சதீஷ் தெரிந்து கொள்கிறார்.

ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து வைரத்தை அபேஸ் பண்ண திட்டம் போடுகிறார் சதீஷ். இறுதியில் வைரத்தை ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து சதீஷ் கொள்ளை அடித்தாரா? கொள்ளை சம்பவத்தில் மேஜிக் கலைஞரான சதீஷ் ஈடுபட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக வரும் சதீஸ் காமெடி காட்சிகள் ஓகே. ஆனால் , நடிப்பை இன்னும் கொஞ்சம் நன்றாக காண்பித்திருக்கலாம். காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார். சதீஷ் மேஜிக் நிபுணர் என்று சொல்லுகிறார்கள். ஆனால், அந்த மேஜிக்கிற்கு அதிக அவரை கொடுக்கப்படாதது வருத்தம்.

நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் குப்தா, கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், காட்சிகளில் முக்கியத்தும் இன்றி இருக்கிறார். திடீர் திடீர் என்று வரும் அவரை விட, சில காட்சிகளில் மட்டும் வரும் தாரணி கவனம் ஈர்க்கிறார்.

ஆனந்தராஜ், சுப்பிரமணி சிவா, மதுசூதன ராவ், ஜான் விஜய், பாவேல் நவகீதன், ஜப்பான் குமார், சாம்ஸ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் போட்டி போட்டு சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக ஆனந்தராஜ் செய்யும் காமெடிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக் மற்றும் இசையமைப்பாளர் வி.பி.ஆர் ஆகியோரது பணி படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. படத்தொகுப்பாளர் அருள் இளங்கோ சித்தார்த், எந்தவித குழப்பமும் இன்றி, திருட்டு சம்பவங்களை மிக சுவாரஸ்யமாக தொகுத்து படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைத்திருக்கிறார்.

இன்ட்ரெஸ்டிங்கான கதை தான். ஆனால் அதை குழப்பமான திரைக்கதையால் அணுகியுள்ளார் இயக்குநர் வெங்கி. ஒரே இடத்தில் கதைக்களம் நகர்ந்தாலும் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.