Reviews

பனி விழும் இரவு ; விமர்சனம்


திரைப்படம் கொடைக்கானலின் பனிமூட்டமான மலைப்பகுதியில் நடைபெறும் ஒரு மர்மமான கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்ட ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

திருமணம் செய்யவிருக்கும் அருண் கார்த்தி மற்றும் ஏனாக்ஷி கங்குலி ஆகிய இருவரும் தங்களுடைய திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்பிற்காக கொடைக்கானலில் உள்ள ஒரு பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கு திடீரென மணப்பெண் ஏனாக்ஷி காணாமல் போகவே, அதிர்ச்சியடைந்த அருண் கார்த்தி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

இந்த வழக்கைப் பொறுப்பேற்று விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் மதிமாறன், கான்ஸ்டபிள் கருப்பு நம்பியாருடன் இணைந்து விசாரணையைத் தொடங்குகிறார். விசாரணை தீவிரமடையும் போது, ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு உண்மையை மறைப்பது தெரியவருகிறது. உண்மையில் காணாமல் போனது யார், அதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன என்பதை நோக்கித்தான் மீதிக்கதை நகர்கிறது..

முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருண் கார்த்தி, காதல், ஏக்கம், கவலை மற்றும் விரக்தி போன்ற உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல் எதார்த்தமாக வெளிப்படுத்தி ஒரு அழுத்தமான நடிப்பைத் தந்துள்ளார்.

கதையின் மைய மர்மமாக விளங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஏனாக்ஷி கங்குலி, தனது சிறப்பான நடிப்பின் மூலம் கதையின் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் மதிமாறனாக வரும் சேரன் ராஜ், காவல்துறை அதிகாரிக்கே உரிய முதிர்ச்சியையும் அதிகாரத்தையும் தனது பாத்திரத்தில் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் இணைந்து கருப்பு நம்பியார், சரவண சக்தி, எஸ்.ஆர். ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர் மற்றும் வினோத் ஆகிய குணச்சித்திர மற்றும் முக்கிய நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சரியாகச் செய்து மர்மக் கதையின் நகர்விற்கு பலம் சேர்த்துள்ளனர்.

இசையமைப்பாளர் சத்யா முருகனின் பின்னணி இசை கதையின் சஸ்பென்ஸ் மற்றும் பதற்றமான காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாக அமைந்து காட்சிகளின் உணர்வை ரசிகர்களிடம் கடத்துகிறது. ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல் கொடைக்கானலின் இயற்கை அழகை அழகாகப் படம் பிடித்தது மட்டுமன்றி, அந்த பங்களாவைச் சுற்றியுள்ள ஒருவித பயமுறுத்தும் மர்மமான சூழலையும் தனது கேமராவில் மிக நேர்த்தியாகக் காட்டியுள்ளார்.

இயக்குனர் எஸ்.ஆர். ராஜேஷ் கதையின் ஆரம்பத்திலிருந்தே மர்மத்தை உருவாக்கி, எதிர்பாராத திருப்பங்கள் மூலம் திரைக்கதையை நகர்த்திய விதம் அவருடைய பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. இருப்பினும், படத்தின் சில பகுதிகள் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம் என்பதும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் இறுக்கமான அணுகுமுறையைக் கையாண்டிருந்தால் படம் கூடுதல் சுவாரசியமாக இருந்திருக்கும்

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கதைகளைத் தேடிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இதில் உள்ள சுவாரசியமான திருப்பங்களும் மர்மங்களும் நிச்சயம் பிடிக்கும்.மொத்தத்தில், சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், இறுதிவரை யூகிக்க முடியாத ஒரு சுவாரசியமான மர்மக்கதையைத் தரக்கூடிய ஒரு சுமாரான நல்ல த்ரில்லர் அனுபவமாகும்.