பள்ளிப் படிப்பின்போது தனக்கு கசப்பான அனுபவத்தை தந்த அர்ஜுன்தாஸை, பல்கலைக் கழகப் படிப்பின்போது பழி வாங்கத் துடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம். இருவருக்கும் மாணவ மாணவிகளின் பேராதரவு கிடைக்க, இருவருக்குமான பகை இரு தரப்புக்கான மோதலாக வெடிக்க அடிதடி, வெட்டுக்குத்து என அடுத்தடுத்த காட்சிகள் அத்தனையும் ரணகளம். இடையில் அரசியல்வாதியொருவரும் அவருடைய மகளும் தங்கள் பங்கிற்கு அடாவடி அராஜகத்தில் ஈடுபட நிறைவில் யார் கை ஓங்கியது, யார் கை அடங்கியது என்பதே கதை…
அர்ஜூன் தாஸ், வழக்கத்தை விட நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கோபக்கார இளைஞராக அவர் திரையில் தோன்றும் போதெல்லாம், திரையில் தீப்பிடிப்பதை போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறார். ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கிறது.
இதுவரை சாஃப்ட்டான கேரக்டர்களில் நடித்து வந்த காளிதாஸ் ஜெயராம், ரக்கடான கேரக்டரில் நடித்து, ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அவருடைய நடிப்பில் நிறைய வித்தியாசம். இந்தப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்.
நாயகிகளாக நடித்திருக்கும் டி.ஜெ.பானு மற்றும் சஞ்சனா நடராஜன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வில்லியாக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீனிவாசன், காமெடி வேடத்தில் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மெர்வின் ரோசரியோ, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ஜிஷ்மி காளித் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் மற்றும் மாணவர்களின் வாகன பேரணி போன்ற காட்சிகளை ஒரே ஷாட்டில் படமாக்கி அசத்தியிருப்பவர்கள், படத்தை பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் புரியவில்லை என்றாலும் கேட்கும்படி இருக்கிறது.
ஒரு பல்கலைக்கழக வளாகத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார். அதனால் ரசிகர்களுக்கான திரைப்படமாக அல்லாமல் தனக்கான திரைப்படமாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். முக்க்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் பழி வாங்கும் மோதல், ரேக்கிங், சாதிய பாகுபாடு, கல்லூரி தேர்தல், காதல் என எல்லாவற்றையும் திரைக்கதைக்குள் திணித்தது, படத்தின் பலவீனம். பிரமாண்டத்தினை காட்சிப் படுத்தியவர், திரைக் கதையையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கலாம்