சத்தமின்றி முத்தம் தா : விமர்சனம்


படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய ஒருவர் விரட்டுகிறார். வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச் செல்லும் பிரியங்காவை கார் ஒன்று அடித்து விடுகிறது. இதனால் தூக்கி வீசப்படும் பிரியங்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறார் பிரியங்கா. அதன்பிறகு, நான்தான் உன் கணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீகாந்த்.

பின் இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சில காலம் ஓய்வெடுக்கிறார் பிரியங்கா. இப்படியாக செல்லும் போது, அவ்வப்போது ஸ்ரீகாந்த் சிலரை கொடூரமாக கொன்று வருகிறார். பிரியங்காவின் கண்முன்னே இருவரை கொல்கிறார். வாழ்க்கை வெறுத்துப் போனது போல் இருக்கும் ப்ரியங்காவிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. அடுத்து என்ன நடந்தது.?? ஸ்ரீகாந்த் யார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஓர் இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றியிருக்கும் ஸ்ரீகாந்த், பெரும்பாலான காட்சிகளில் சாந்த சொரூபியாக, ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே நேரம், ஆக்‌ஷன் காட்சிகளில் ஆக்ரோஷமாக அதிரடியில் இறங்கி, நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்

நாயகி சந்தியாவாக நடித்திருக்கிறார் பிரியங்கா திம்மேஷ். விபத்தில் அடிபட்டு பழைய சம்பவங்களை மறந்துவிட்டு, எது உண்மை? எது பொய்? என புரியாமல் குழம்பி, ’எடுப்பார் கைப்பிள்ளை’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, அனுதாபத்தை அள்ளுகிறார். பயம், பதட்டம், கோபம், ரொமான்ஸ் என சகல உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர்களுடன் ஹரீஷ் பெராடி – இன்ஸ்பெக்டர் எட்வர்ட், வியான் – ரகு, நிஹாரிகா – ஷீலா ஆகிய ஒரு சில கதாபாத்திரங்கள் தான் என்றாலும் படத்தின் முக்கியத்துவத்தை அறிந்து சிறப்பாக செய்துள்ளனர்.

வீட்டிற்குள்ளேயே நடக்கும் சம்பவங்கள், பாடல்கள், துரத்தல் காட்சிகள் அனைத்துமே தன் காட்சிக் கோணங்களில் அசத்தலாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.எம். காட்சிகளின் விறுவிறுப்பை உணர்ந்து பின்னணி இசை தந்திருக்கிறார் ஜுபின்.

சஸ்பென்ஸ் திரில்லருக்கேற்ற நல்லதொரு கதையை கையிலெடுத்த இயக்குநர் ராஜ்தேவ் மோசமில்லை எனும் சொல்லும் அளவிற்கு சிறப்பாகவே இயக்கியிருக்கிறார். திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, காட்சிகளில் உள்ள செயற்கைத் தன்மையை நீக்கியிருந்தால் இன்னும் கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.