ஜோஷ்வா இமை போல் காக்க ; விமர்சனம்


லண்டனில், சர்வதேச அளவில் கூலிக்கு கொலை செய்யும் காண்ட்ராக்ட் கில்லராகத் திகழ்பவர் ஜோஷ்வா (வருண்).. அப்படி போட்டுத் தள்ளும் அசைன்மெண்ட்டுக்காக சென்னைக்கு வந்த இடத்தில், நாயகி குந்தவி சிதம்பரத்தை (ராஹே) தற்செயலாகப் பார்த்ததும் காதல் கொள்கிறார். நாயகி குந்தவி, தான் அமெரிக்காவில், நியூயார்க் நகரில் வழக்கறிஞராக இருப்பதைச் சொல்லுகிறார். அவருடன் பழக ஆரம்பித்ததும் தனைப்பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகிறார் ஜோஷ்வா.

ஆனால், ஜோஷ்வாவின் காதலுக்கு “நோ” சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றுவிடுகிறார் ராஹே. அங்கே உலகப் பிரசித்தி பெற்ற போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஒருவனுக்கு எதிராக வாதாடி, தண்டனை வாங்கிக் கொடுக்க நியமிக்கப்படுகிறார் ஆனால் இறுதி விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு வரும்முன் அவரையும் தீர்த்துக்கட்ட கொலைக்கும்பல் தீவிரமாக இருக்கிறது.

இந்தநிலையில் எதிர்பாராத விதமாக ஜோஷ்வா, குந்தவிக்கு மெய்க்காப்பாளராக நியமிக்கப்படுகிறார். இதனால் இருவரையும் கொலை செய்ய மாஃபியா குமபல் முயற்சிக்கிறது. இதன் பிறகு, என்ன நடந்தது? என்பது தான் மீதிக்கதை.

ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாவது அத்தனை சாத்தியமில்லை. ஆனால் அப்படி ஒரு சாத்தியத்தை வருணுக்கு அமைத்துத் தந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதைப் புரிந்து கொண்ட வருணும் தன்னை எவ்வளவு வருத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு வருத்திக் கொண்டு ஒரு அறிமுக ஹீரோ என்கிற நினைவு நமக்கு வராமல் ஒரு ஆங்கிலப் பட ஹீரோ போலவே நடித்திருக்கிறார்.

ஜோஷ்வாவின் மனதைக் கொள்ளையடித்தவராக ராஹே, தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் தேவைக்கேற்ப கண்களில் பயத்தையும் பதட்டத்தையும் சரியாக கடத்தியிருக்கிறார். காதல், எமோஷ்னல் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஹீரோயினை போட்டுத்தள்ளினால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்; தப்பிக்க விட்டால் நட்பு பிழைக்கும் என்ற நிலையில் என்ன முடிவெடுப்பது என தடுமாறி தடம் மாறுகிற கிருஷ்ணா, மெல்லிய வில்லத்தனத்தால் தன் பாத்திரத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.

ஜோஷ்வாவுக்கு கொலை வாய்ப்பு வழங்குகிற டானாக டிடி. அவரை தீர்த்துக் கட்ட எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள், இவரது கதையை முடிக்க கான்ட்ராக்ட் போட்டோம் என்றெல்லாம் வார்த்தைகளில் கெத்து காட்டுபவர், அதற்கேற்ப ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். மன்சூர் அலிகான், விசித்ரா ஊறுகாய் போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கிளைமாக்ஸில் கவனிக்க வைக்கிறது கிட்டியின் துடிப்பான நடிப்பு.

எஸ் ஆர் கதிர் மற்றும் ஆண்டனி இருவரின் ஒளிப்பதிவும், ‘ஜோஷ்வா’ படத்தின் பெரும்பலமாக இருக்கிறது. சவாலான சேஷிங் காட்சிகளிலும், மிகக் குறுகலான இடங்களிலும், அழகாக படம்பிடித்துள்ளனர். அதோடு, பெரும்பாலான க்ளோசப் காட்சிகள், ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவின் தரத்தினை உயர்த்திபிடிக்கும், ஆண்டனியின் எடிட்டிங், சூப்பர். இசையமைப்பாளர் கார்த்திக், தன்னால் முடிந்தவரை காட்சிகளின் விறுவிறுப்பினை கூட்டியிருக்கிறார்.

சுமார் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, திணறத் திணற ஆக்‌ஷன் காட்சிகளில் மூழ்கடித்து, படத்தை விறுவிறுப்பாக, வித்தியாசமாக நகர்த்திச் சென்றுள்ளார். எளிமையான கதைக்கருவையும், மெல்லிசான ஒன்லைனையும் வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, ஒரு சர்வதேச அளவிலான அதிரடி ஆக்‌ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.