விட்னஸ் ; விமர்சனம்

ரோகினி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் விட்னஸ். துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எடுத்துரைத்து இந்தப் படத்தை இயக்குநர் தீபக் உருவாக்கியுள்ளார். இந்த படம் Sony Liv OTT தளத்தில் வெளியானது.

தூய்மை பணியாளர் ரோகிணியின் மகன் தமிழரசன் குடும்ப சூழல் காரணமாக கழிவுநீர் குழாய் அடைப்பை எடுக்கும் பணிக்கு தள்ளப்படுகிறார். அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரி செய்யும்போது இறந்து விடுகிறார். அதே குடியிருப்பில் கட்டிட நிபுணரான நாயகி ஷரத்தா ஸ்ரீநாத் வசிக்கிறார். இளைஞனின் மரணம் ஷரத்தாவை உலுக்க மகனை பறிகொடுத்து நிராயுதபாணியாக நிற்கும் ரோகிணிக்கு உதவ முன்வருகிறார். மகனின் சாவுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ரோகிணி போராடுகிறார். ரோகிணியால் ஆள் பலம், பண பலம் படைத்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஜெயிக்க முடிந்ததா? என்பது மீதிக்கதை.

நாயகி ஷர்த்தா ஸ்ரீநாத் மிக யதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். தன்னை சீண்டுபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் கைதட்டல் பெறுகிறார். தாய் கதாபாத்திரத்தில் வரும் ரோகிணி மகனை இழந்து தவிப்பது, உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டு போராடுவது என்று நடிப்பில் பல இடங்களில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி கேரக்டருக்கு அழகு சேர்த்துள்ளார்.

வக்கீலாக வரும் சண்முகராஜன் கோர்ட்டில் பேசும் வசனங்கள் ஈர்க்கின்றன. நீச்சல் பயிற்சியாளராக வரும் தமிழரசன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார்.

அநீதியை எதிர்த்து போராடுபவராக வரும் ஜி. செல்வா, அவருடைய மனைவியாக வரும் சுபத்ரா ராபர்ட், அரசு அதிகாரியாக வரும் அழகம் பெருமாள், மாமாவாக வரும் வினோத் சாகர், குடியிருப்பு சங்க தலைவராக வரும் ஸ்ரீநாத் என அனைவரும் திரைக்கதைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

விட்னஸ் படத்தில் இயக்குநர் பேசும் கருத்து நன்று. ஆனால் முழுக்க முழுக்க கலைப் படம் போல படமாக்கப்பட்டுள்ளது. லாபத்தை எதிர்பார்க்காமல் இப்படி ஒரு செய்தி படத்தை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

கதை நன்றாக இருக்கிறது, ஆனால் இயக்குநர் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கண்ணீரையும் யதார்த்தமான பார்வையில் காட்டும் படம் இது. சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தி கொடுக்க கூடிய படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *