யானைமுகத்தான் ; விமர்சனம்

‘இன்னு முதல்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம், யானை முகத்தான். மலையாளத்தில் லால் பகதூர் சாஸ்த்ரி, வரிக்குழியிலே கொல பாதகம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ராஜேஷ் மிதில்லா, முதல் முறையாக நடிகர் யோகி பாபுவுடன் கைக்கோர்த்து தமிழில் களமிறங்கியுள்ளார். இதில் ரமேஷ் திலக், ஊர்வசி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சென்னையில் ஊரெல்லாம் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பொறுப்பற்ற இளைஞர் கணேசன் (ரமேஷ் திலக்). விநாயகர் பக்தரான இவர், தனது அனைத்து பிரச்சனைகளையும் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என கடவுளிடம் தினமும் வேண்டுகோள் வைக்கிறார். ஒரு நாள், விநாயகர் சிலை, புகைப்படம் எதுவும் கணேசனின் கண்களுக்கு தெரியாமல் போகிறது. துடிதுடித்து போன கணேசிற்கு யோகி பாபு வடிவில் நேரில் காட்சி தருகிறார், விநாயகர். அடுத்து என்ன நடந்தது? கணேசன் திருந்தி வாழ்ந்தாரா? கணேசனை காண விநாயகர் நேரில் வந்தது ஏன்? என்பது தான் மீதிக்கதை.

தெய்வத்திற்கும் மனிதனுக்குமான பிரச்சனையை காமெடி கதை வடிவில் கூற முயற்சித்துள்ளார் இயக்குநர். என்னதான் படத்தில் யோகிபாபு இருந்தாலும், காமெடிக்கு பஞ்சம் தான். எந்த படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்தாலும் தனது இயல்பான உடல் மொழியினாலும் அவ்வப்போது கொடுக்கும் காமெடி கவுண்டர் வசனத்தினாலும் ரசிகர்களை ஈர்ப்பவர், ரமேஷ் திலக். அவருக்கு மொத்த படத்தையும் தாங்கி நிற்கும் பொறுப்பு, அதை அவர் கச்சிதமாக செய்துள்ளார்.

மலையாளத்தில் ஒர்க் அவுட் ஆன இந்தப்படத்தில் அதேபோல் தமிழில் சிறப்பாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் படத்தை அழகாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். ஊர்வசி, கருணாகரன் உள்ளிட்டோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர்.

ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படத்தை பார்க்க நினைப்பவர்கள் தாராளமாக யானை முகத்தான் பார்க்கலாம்.