நடிகரை எதிர்த்து சங்கத்தில் இருந்து விலகிய ரம்யா நம்பீசன்


கடந்த வருடம் நடிகை விவகாரத்தில் சிக்கி கைதான மலையாள நடிகர் திலீப் தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். திலீப் கைது செய்யப்பட்டபோது, அவர் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’விலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீண்டும் சங்கத்தில் சேர்வாரா, இல்லை சங்கத்தில் சேராமலேயே படங்களில் நடிப்பாரா என கேள்வி எழுந்தது. ஆனாலும் திலீப் கைதுசெய்யப்பட்டபோது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அவரை விலக்கும் முடிவை எடுத்த நடிகர் சங்கம், அதன்பின் திலீப்பிற்கு எந்தவித சங்கடங்களையும் தரவில்லை.

இந்தநிலையில் நேற்று கூடிய நடிகர்சங்க பொதுக்குழுவில் திலீப் நடிகர்சங்க உறுப்பினராக தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இதற்கு பெரும்பாலும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் சினிமா உலகத்தில் சமீபகாலகமாக உருவாகியுள்ள பெண்கள் நல அமைப்பு இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“திலீப் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறைசென்று , அதன்பின் தற்போது ஜாமீனில் தான் வெளிவந்துள்ளார். இன்னும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அவசர அவசரமாக திலீப்பை நடிகர்சங்கத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் என்ன..? இது பெண்களுக்கு எதிரான நடவடிக்கை” என கொதித்தனர் இந்தச்சூழலில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகள் அம்மா சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.