சி எஸ் கே(CSK) – விமர்சனம்

வைரங்களை விற்கும் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் கார்த்திகா, இரவில் தாமதமாக கிளம்ப வேண்டிய சூழலில் மாட்டிக்கொள்கிறார். அப்படி வெளியேறும்போது கார் பார்க்கிங்கில் தன்னுடன் வேலை பார்க்கும் சந்துருவும் சஞ்சய்யும் சேர்ந்து உயர் அதிகாரியை கொலை செய்வதை பார்த்து விடுகிறார். இதை கொலையாளிகள் இருவரும் கவனித்து கார்த்திகாவையும் கொலை செய்ய துரத்துகிறார்கள்.

ஸ்பென்சர் பிளாசா மாதிரியான ஒரு காம்ப்ளெக்சில் அந்த அலுவலகம் அமைந்திருப்பதால் அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க முயற்சி செய்து அங்கும் இங்கும் சுற்றி அலைகிறார் கார்த்திகா. ஒருகட்டத்தில் வில்லன்களிடமும் சிக்கி கொள்கிறார்.. இதற்கிடையே கார்த்திகாவை காதலிக்கும் சார்லஸ் அவரை காணாமல் தேடிக்கொண்டு அந்த கட்டடத்திற்கு வருகிறார். சந்தேகத்தின் பேரில் அந்த ஏரியாவையே சுற்றிவரும் அவர் போலீசின் உதவியையும் நாடுகிறார்.

இன்னொரு பக்கம் கார்த்திகாவுக்கே தெரியாமல் சில வைரங்கள் அடங்கிய டப்பாவை அவரிடம் ஒப்படைத்திருந்த, கார்த்திகாவின் நண்பரான ஷபீக்கும் அந்த வைரங்களை வாங்கி, தனது பாஸிடம் ஒப்படைத்து, அவனிடம் பிணைக்கைதியாக உள்ள தனது தந்தையை மீட்கும் வேகத்துடன் அவரைத்தேடி சென்னை வருகிறார். கார்த்திகா தப்பித்தாரா.. சார்லஸால் கார்த்திகாவை காப்பாற்ற முடிந்ததா..? இந்த களேபரத்தில் ஷபீக்கிற்கு வைரங்கள் திரும்ப கிடைத்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

சார்லஸ் (சரண்குமார்), ஷபீக் (மிஷால் நசீர்), கார்த்திகா (ஜெய் குஹேய்னி) என மூன்று கதாபாத்திரங்களின் முதல் பெயரை டைட்டிலாக்கி சி எஸ் கே என கிரிக்கெட் பிளேவரில் பப்ளிசிட்டி செய்ததெல்லாம் ஓகே.. அதற்கேற்ற மாதிரி படத்தின் ஹீரோ கதாபாத்திரமான சார்லஸ் கிரிக்கெட் வீரனாவது தான் தன எதிர்கால லட்சியம் என்று சொல்வதும் கூட ஓகே தான். ஆனால் அதை உண்மை என ரசிகர்கள் நம்புவதற்காக அவர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளையோ அல்லது டிவியில் கிரிக்கெட் ஒளிபரப்பாகும்போது ஹீரோ பார்ப்பது போலவோ ஒரு காட்சியாவது இருக்கவேண்டாமா..? அட கிரிக்கெட் பேட்டை அவர் கையில் வைத்திருப்பதாக ஒரு ஷாட் காட்டியிருந்தால் கூட மனதை சமாதானப்படுத்திக்கொள்ளலாமே. படத்தின் பட்ஜெட்டில் கிரிக்கெட் பேட்டும் அடிபட்டு விட்டது போல.

எதிரிகளிடம் சிக்கிக்கொண்ட கார்த்திகா முதல் தடவை அவர்களை தள்ளிவிட்டுவிட்டு தப்பித்து ஓடுகிறார். கதாநாயகிகள் தப்பி ஓடவேண்டிய தமிழ் சினிமா இலக்கணப்படி இவரும் கிரவுண்ட் புளோருக்கு போவதற்கு பதிலாக மாடிக்குத்தான் ஓடுகிறார். ஒளிகிறார். வில்லனின் கண்ணில் தட்டுப்பட்டு காலில் கண்ணாடி குத்துக்காயம் வாங்குகிறார்.

எல்லாம் சரி தான்.. காலில் அடிபட்ட ஒரு பொம்பளை அவ்வளவு வேகமாக ஓடுகிறார். துரத்தி வரும் இரண்டு இளந்தாரிகளால் அவரை பிடிக்க முடியவில்லையாம்.. என்னய்யா கூத்து இது.? காரிடாரில் துரத்தும்போது இந்த இரு தரப்பினருக்கும் பத்து அடி இடைவெளி கூட இல்லை. ஆனால் படிக்கட்டில் கார்த்திகா கீழே இறங்கும்போது வில்லன்களில் ஒருத்தரைகூட பின்னாடி காணோம்.. என்ன ஆனாங்க பாஸ்..?

அதேபோல பிக்னிக் வந்த சின்னப்பசங்க அந்த இடத்தை விட்டு வரமாட்டேன்னு அடம்பிடிக்கிற மாதிரி ஹீரோயின் பொண்ணு அந்த காம்ப்ளெக்ஸ் முழுசும் சுத்தி வருதே தவிர ஏதாவது ஒரு கண்ணாடிய ஒடச்சி வெளியே தப்பிப்போமே என்கிற ஐடியாவெல்லாம் அதுக்கு வரவே இல்லையா..? கார் பார்க்கிங் வழியா செக்யூரிட்டி வரதுக்கு வழி இருக்கும்போது, இந்தம்மாவுக்கும் மட்டும் தப்பிச்சு போகுறதுக்கு வழி இருக்காதா என்ன..?

எந்த ஊர்லய்யா இருக்காங்க இந்த மாதிரி சோதா வில்லனுங்க..? அந்தப்பொண்ணு ரெண்டு, மூணு தடவ வலிய வந்து சிக்குது… இவங்க பந்தா பண்ணிட்டு விட்டுர்றாங்க.. ஒரு ஆம்பள மேனஜரை மூச்சை அமுக்கி ஒரு நிமிஷத்துக்குள்ள கொல்லுற இவங்க, அந்த பொண்ணு சிக்குனதும் உடனே பட்டுன்னு கொல்லாம, முதல்ல தலையில ஒரு கட்டையால அடிச்சு மயக்கமாக்குறாங்களாம்.. அப்புறம் ஸ்டோர் ரூமுக்கு இழுத்துட்டு போறாங்களாம்.. நோ.. நோ.. நீங்க நினைக்கிறதுக்கெல்லாம் இங்க வில்லனுங்களுக்கு டைம் இல்ல.. அவங்க அந்த மாதிரி ஆளுங்களும் இல்ல.. கொண்டுபோய் கைகால்ல டேப்பை சுத்தி.. திரும்பவும் கட்டையால அடிச்சு, தண்ணீர் ட்ரம்முக்குள்ள தூக்கிப்போட்டு, அட போங்கய்யா.. வடிவேலு மூட்டப்பூச்சி மிஷின் வித்த கதை தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

இதுல ஷபீக் கதாபாத்திரம்னு ஒன்னு தூத்துக்குடில இன்ட்ரோ ஆகுது. இதுல என்ன ஸ்பெஷல்னா, இந்த கேரக்டர் வர்ற காட்சிகளை எல்லாம் தூக்கிட்டு படத்தை பார்த்தீங்கன்னாலும் படம் உங்களுக்கு புரியும்.. எந்த வித்தியாசமும் இருக்காது. இந்த தூத்துக்குடி, சென்னைன்னு ரெண்டு சம்பவங்களுக்கும் வைரம்னு ஒரு பொதுவான அம்சம் இருந்தும் அத ரெண்டுக்கும் ஜாய்ன்ட் கொடுக்காம வசதியா கழட்டி விட்டுட்டாரு இயக்குனர் சத்திய மூர்த்தி.

அப்புறம் அந்த போலீஸ் இருக்காங்களே.. யப்பா..! அந்த ஏ.சி.பி ரேங்க்ல இருக்குறவரு எவ்வளவு சீரியஸா அந்த பொண்ண கண்டுபிடிக்க, ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ணச்சொல்லி ஆளுங்கள அனுப்புறாரு. அவங்க என்னன்னா, வந்த இடத்துல அதிரடியா சோதனை பண்ணுறத விட்டுட்டு, தீபாவளி இனாம் வாங்க பண்ணையார் வீட்டுக்கு வந்தவங்க மாதிரி காம்ப்ளெக்ஸ தேமேன்னு சுத்திப்பாத்துட்டு இருக்காங்க..

அப்புறம் தூத்துக்குடில இருந்த எந்த ஆம்னி பஸ் பகல்ல…. சரி விடுங்க பாஸ்.. இப்படியே சொல்லிட்டே இருந்தா டைம் போய்க்கிட்டேதான் இருக்கும். அதனால நீங்களும் ஒரு எட்டு என்னனுதான் போய் பாத்துட்டு வாங்கப்பு.. கிளம்புங்க