முருகதாஸ் இப்படி செய்யலாமா?

தனது உதவி இயக்குனர்கள் பலரும் இயக்குனர்களாக சினிமா உலகில் அடியெடுத்து வைக்க, தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து அவர்களை அறிமுகப்படுத்தும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். நல்ல விஷயம் தான்.. தாராளமாக செய்யட்டும்.

இந்தமுறை அந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் முருகதாஸின் ஆஸ்தான துணை இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி. இவர் ‘ஏழாம் அறிவு’ மற்றும் ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் பணியாற்றியவர். இவர் இயக்கும் படத்திற்கு ‘ரங்கூன்’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.

பர்மாவில் நடப்பதுபோல கதையை அமைத்தாரா, அல்லது பர்மாவுக்கு போய் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என நினைத்து கதையை அமைத்தாரா..? அது இயக்குனருக்கே வெளிச்சம்.. ஆனால் நம் நாட்டை தவிர மற்ற எந்த நாடுகளுக்கு போனாலும் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கான சட்டதிட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

படப்பிடிப்பு நடத்தலாம்.. அதற்கு அவர்களே பாதுகாப்பும் கூட தருவார்கள். ஆனால் அதற்கு முறைப்படி அனுமதி வாங்கியிருக்கவேண்டும்.. நம் ஊரைப்போல அனுமதி வாங்காமலேயே கண்ட இடங்களில் இஷ்டத்துக்கு கேமராவை வைப்பது போல அங்கே வைக்க முடியாது. இதில் பர்மாவும் விதிவிலக்கல்ல.

ஆனால் ஆர்வக்கோளாறு காரணமாகவோ அல்லது எவன் நம்மை கேட்கப்போகிறான் என்ற தப்புக்கணக்குப்போட்டோ சில இடங்களில் அனுமதி வாங்காமலேயே பர்மாவில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறார் இயக்குனர். உடனே இந்த தகவல் பர்மா போலீசுக்கு போக, சில நிமிடங்களில் விரைந்து வந்து படப்பிடிப்பை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்..

அவர்கள் என்ன நம்ம ஊர் போலீஸ் மாதிரி சில்லறையை வாங்கிக்கொண்டு சிரிச்சுக்கிட்டே வழியனுப்புபவர்களா என்ன..? இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில் சிக்கவைப்பதற்கென்றே தயாரிப்பு நிர்வாகிகளில் சில பலி ஆடுகள் இருக்கும். அப்படித்தான் இதற்கு பொறுப்பு என இரண்டு தயாரிப்பு நிர்வாகிகளை படப்பிடிப்பு குழுவினர் கைகாட்ட, அவர்களை அள்ளிக்கொண்டு போய் சிறையில் அடைத்துள்ளது பர்மா போலீஸ்..

மற்றவர்கள் கிரேட் எஸ்கேப்.. இந்த விவரம் தயாரிப்பாளரான ஏ.ஆர்.முருகதாஸ் காதுக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் பார்மாவில் சிறையில் இருப்பவர்களை மீட்க, இதுநாள்வரை எந்த ஒரு நடவடிக்கையும் முருகதாஸ் தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லையாம். ஒருவேளை லஞ்சப்பிரச்சனை, உள்ளூர் தண்ணீர் பிரச்சனைகளில் அதுவும் சினிமாவில் மட்டும் தான் முருகதாஸ் தலையிடுவாரோ என்னவோ..? முருகதாஸின் இந்த செயலால் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம்.