எல்லோருக்கும் பொதுவான படங்களை பண்ணுவது என்பது ஒரு வகை.. இளைஞர்களை மட்டுமே குறிவைத்து படம் பண்ணுவது இன்னொரு வகை. இதில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கும் மணிரத்னம், முழுக்க முழுக்க இளமை ததும்ப எடுத்திருக்கும் படம் தான் ‘ஓ காதல் கண்மணி’.
மும்பையில் தனது அண்ணனின் நண்பரான பிரகாஷ்ராஜ் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்குகிறார் துல்கர் சல்மான். வீடியோ கேம்ஸ் உருவாக்குவதில் சாதனை படைத்து பணக்காரனாகும் லட்சியம் கொண்ட அவர், மும்பை வந்த நாளன்றே நித்யா மேனனை சந்திக்கிறார். தொடர்ந்து பார்த்து, பழகப்பழக, நட்பு காதலாகிறது.
ஒரு ஆர்க்கிடெக்ட்டாக விரைவில் வெளிநாடு சென்று சாதிக்க துடிக்கும் நித்யா மேனனும் துல்கரை விரும்ப, அவர் வெளிநாடு போகும் வரை லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறார்கள் இருவரும்.. காதலையும் அது தரும் சந்தோஷத்தையும் துளித்துளியாய் அனுபவிக்கும் அவர்களால், ஏற்கனவே தீர்மானித்தபடி அவ்வளவு எளிதாக பிரிய முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்..
எந்தவித வர்ணனைகளையும் மேற்கோள் காட்டாமல் சொல்லவேண்டும் என்றால் துல்கர், நித்யா இருவரின் காதல் கலாட்டாக்கள் தான் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.. ஆனால் என்ன ஒன்று.. துல்கர் இயல்பாய் இருக்க முயற்சிக்கிறார்.. நித்யா மேனன் இயல்பாய் நடிக்க முயற்சித்து பல இடங்களில் செயற்கை சாயம் பூசிக்கொள்ளுகிறார்.
மும்பை தம்பதிகளாக பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன்.. மறதியால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் அதன்போக்கில் குடும்பம் நடத்தும் எதார்த்தவாதியாக பிரகாஷ்ராஜுக்கு இது உண்மையிலேயே புது ஏரியா தான். அவரது மனைவியாக வரும் லீலா சாம்சனிடம் நூறு படங்களில் நடித்த அனுபவம் தெரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏழு பாடல்களா என கேட்கும்போது கண்ணை கட்டினாலும், படத்துடன் பார்க்கும்போது, எங்கேயும் துருத்தாமல் காட்சிகளுடனேயே நகர்வது மிகப்பெரிய ஆறுதல்.. பி.சி.ஸ்ரீராமின் கேமரா கோணங்களை நாம் விமர்சிப்பது என்பது, எச்.டி கேமராவை, செல்போன் கேமரா பாராட்டுவது போலத்தான் இருக்கும். நேர்த்தியான ஒளிப்பதிவில் புதிய மும்பைக்குள் உலாவரும் உணர்வு ஏற்படுகிறது.
பார்த்த மறுநாளே போன் நம்பர் மாற்றிக்கொள்வது, அதற்கு மறுநாள் ஒன்றாய் சுற்றுவது என்கிற விஷயத்தை மணிரத்னமும் காட்டியிருப்பதுதான் ஆச்சர்யம் தருகிறது. இளசுகளுக்கான படம் என்பதால் இளமை துடிப்புடன் ஒவ்வொரு காட்சியும் நகர்ந்தாலும், படத்தில் திருப்பங்களும், திகைப்புகளும் இல்லாதது ஒரு குறையே. க்ளைமாக்ஸில் இருவரும் பிரிவின் வழியை உணரும் காட்சிகளில் மட்டும் பழைய மணிரத்னம் பளிச்சென வந்து போகிறார்.
காட்சிப்படுத்துதலில் தான் இன்னும் இளமையாக இருப்பதை மணிரத்னம் நிரூபித்தாலும், கதை உருவாக்கத்தில் அவருக்கு கொஞ்சம் வயதாகிவிட்டதோ என்கிற எண்ணம் ஏற்படுவதையும் தவிர்க்கமுடியவில்லை..