பதுங்கிய பாயும்புலி.. வாலாட்டும் சூரப்புலி..!

எப்போதும் பெரிய ஸ்டார் படங்கள் வெளியாகும் தருணத்தில் எல்லாம் அவர்களுக்கு டார்ச்சர் கொடுப்பதற்கென்றே சில கும்பல் தயாராக இருக்கும்.. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் தான் டைட்டில்.. அதாவது பிரபலமான நடிகர் படத்துக்கு என்ன டைட்டில் வைத்திருக்கிறார்களோ அதற்கேற்ற மாதிரி வேறொரு படத்துக்கு அதே சாயலில் டைட்டில் வைத்து சம்பந்தப்பட்ட நடிகரை டார்ச்சர் பண்ணுவது..

தங்களது படத்திற்கு அதன்மூலம் இலவச பப்ளிசிட்டி தேடுவது.. முடிந்தால் டைட்டிலை விட்டுக்கொடுப்பதாகவோ அல்லது மாற்றிக்கொள்வதாகவோ சில லட்சங்கள் பேரம் பேசி வாங்கிக்கொண்டு ஒதுங்குவது. அதனால் தான் புதிய படத்தை ஆரம்பிக்கும் இயக்குனர்கள் ஆரம்பத்திலேயே படத்தின் டைட்டிலை வெளியே சொல்வதற்கு மறுக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது விஜய் படங்களாகத்தான் இருக்கும். உதாரணமாக விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதற்கு போட்டியாக ‘கள்ளத்துப்பாக்கி’ என ஒருவர் தன் படத்திற்கு பெயர் வைத்ததோடு விஜய்யின் படத்தலைப்பை மாற்றும்படி கோர்ட்டுக்கும் போய்விட்டார். ஒருவழியாக கொடுக்கவேண்டியதை கொடுத்து ‘துப்பாக்கி’ என்ற பெயரிலேயே படம் வெளியாகி வெற்றியும் பெற்றது.

அதே மாதிரி தான் ‘தலைவா’ பட டைட்டில் விவகாரமும். முதலில் தலைவன் என பெயர் வைக்க, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது(எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் பெயர் தான் ‘தலைவன்’). பின்னர் ‘தலைவா’ என மாற்ற அந்த டைட்டிலும் என்னுடையது என ஒரு மகானுபாவன் போர்க்கொடி தூக்கினார். ஆனாலும் ‘தலைவா’ டைட்டிலை கைப்பற்றியது விஜய்&விஜய் அன் கோ.

இப்போது விஜய் படத்திற்கு ‘புலி’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்க, விஷால் தனது படத்திற்கு ‘பாயும்புலி’ என டைட்டில் வைத்து புலி பட ஆடியோ ரிலீஸ் அன்றே தனது ஆடியோ ரிலீசையும் நடத்திவிட்டார். ஆனால் நல்லவேளையாக பட ரிலீஸ் தேதிகளில் இரண்டு படத்துக்கும் நல்ல இடைவெளி விட்டுவிட்டதால் இரு தரப்புக்குமே சேதாரம் எதுவும் இல்லை.. இருக்கவும் இருக்காது..

ஆனால் இந்த கேப்பில் சத்தமில்லாமல் இவர்களது பப்ளிசிட்டியில் குளிர்காய உள்ளே நுழைந்திருக்கிறது ஒரு ‘சூரப்புலி’. பூபதி பாண்டியனின் உதவியாளர் இயக்கும் இந்தப்படத்தின் ஹீரோ கூட புதுமுகம் தான்.. ஆனால் புலி, பாயும் புலி இவற்றுக்கு போட்டியாக நாங்கள் டைட்டில் வைக்கவில்லை.. அவர்களுக்கு முன்னதாகவே வைத்துவிட்டோம் என படத்தின் இயக்குனர் ஆனந்த் சக்கரவர்த்தி சொல்கிறாராம்.

இருந்தாலும் கூட புலி, பாயும் புலி இசைவெளியீட்டு விழா போஸ்டர்களுக்கு மத்தியில் நகரெங்கும் சூரப்புலி போஸ்டர் ஓட்டப்பட்டிருந்ததை பார்க்கும்போது ‘சூரப்புலி’ டீம் இலவச விளம்பரம் தேடுகிறார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.. பட ரிலீசின்போது மற்ற இரண்டு புலிகளையும் வீணாக சொறியாமல் இருந்தால் சரி தான்.