“கமல் விஷயத்தில் திரையுலகம் வேடிக்கை பார்க்கிறது” ; எஸ்.வி.சேகர் குமுறல்..!


தமிழகத்தில் அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது என கமல் பேசினாலும் பேசினார், ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அவரை ஏகத்துக்கு வசைபாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் பொது மேடையிலேயே கமலை பகிரங்கமாக மிரட்டுகிறார். இந்தநிலையில் கமல் இப்படி அவமதிக்கப்படுவதை திரையுலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது என நடிகர் எஸ்.வி.சேகர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.. இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது..

“கமலஹாசனின் கருத்து சரியா, இல்லையா என்பதற்குள் புகவிரும்பவில்லை. எந்தக் கருத்தாக இருந்தாலும் அதை நாகரிமாக மறுத்திருக்கலாம். இப்படி ஒருமையில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரை பேசியிருப்பது பல லட்சம் பேரால் தேர்வு செய்யப்பட்டு பொதுவாழ்க்கைக்கு வந்திருக்கும் ஓர் அமைச்சருக்கு அழகல்ல… அதேசமயம் திரைப்படத்துறையினர் மீதும் நான் வருத்தப்படுகிறேன். திரையுலகின் மூத்த கலைஞன், தமிழ்சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மதிக்கப்படும் ஒரு கலைஞனை, தங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரனை ஒரு அமைச்சர் ஒருமையில் பேசியிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது வருத்தமளிக்கிறது” என கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்