1996ல் நவரச நாயகன் கார்த்திக்குக்கு ஒரே நாளில் கிழக்கு முகம், உள்ளத்தை அள்ளித்தா என இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டுமே பொங்கலன்று தான் வெளியானது. கிழக்கு முகத்தின் ரிசால்ட்டால் அப்செட்டாக பொங்கல் கூட சாப்பிடாமல் உட்கார்ந்திருந்த கார்த்திக்கிற்கு, உள்ளத்தை அள்ளித்தாவின் ரிசல்ட், அடுத்துவந்த நாளெல்லாம் திகட்டத்திகட்ட பொங்கலை ஊட்டியது.
கிழக்கு முகம் படத்தை ஒரே நாளில் தியேட்டரை விட்டே தூக்கினார்கள்.. ஆனால் உள்ளத்தை அள்ளித்தா படத்தை தூக்க 200 நாட்கள் ஆனது. காரணம் இயக்குனர் சுந்தர்.சி. அதன்பின் கார்த்திக் துவண்டு விழும் நேரமெல்லாம் அவருக்கு கைகொடுத்தது சுந்தர்.சியின் படங்கள் தான். அவ்வளவு ஏன் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த சித்தார்த் கூட சுந்தர்.சியின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் மூலமாகத்தானே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
ஆக, காமெடி படங்களின் ஏகபோக சக்கரவர்த்தியான சுந்தர்.சியின் படங்கள் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என யாரையும் ஏமாற்றாது. அதனால்தான் கடந்த 20 வருடங்களாக சுந்தர்.சியால் மட்டும் இன்னும் பீல்டில் தாக்குப்பிடித்து நிற்கமுடிகிறது.
அப்படிப்பட்ட சுந்தர்.சியின் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக சொல்லிவந்த சிவகார்த்திகேயன், திடீரென் அதிலிருந்து ஜகா வாங்கி விலகிவிட்டாராம். அதுமட்டுமல்ல, சுந்தர்.சியிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் என்பவரின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறாராம். அதையும் அவரே தயாரிக்கிறாராம்.
சிவகார்த்திகேயன் காமெடி ஏரியாவில் ரவுண்டடிப்பவர். சுந்தர்.சியுடன் அவர் இணைந்தால் அது அவரது லைப்டைமில் மிகச்சிறந்த காமெடி ஹிட்டாக கூட அமைந்துவிடும்.. ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் ஒதுங்கியுள்ளதால் நிச்சயமாக சுந்தர்.சிக்கு எந்த பாதிப்பும் இருக்கப்போவது இல்லை. அவருக்கு ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக சிவகார்த்திகேயனுக்கு இது நட்டக்கணக்கில் தான் சேரும். சுந்தர்.சியும், அவரது சிஷ்யனும் ஒன்றாக முடியாதல்லவா..? இதை சிவகார்த்திகேயன் உணரும் காலம் விரைவிலேயே வரும்.