தோழா – விமர்சனம்


கார்த்தி – நாகார்ஜுனா இணைந்து நடித்து வம்சி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ‘தோழா’, அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்துள்ளதா பார்க்கலாம்.

தனது அம்மா கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பணம் சம்பாதிக்க திருடப்போய் ஜெயிலுக்கு போகிறார் கார்த்தி. அவரை நன்னடத்தைக்காக நான்கு மாத பரோலில் வெளியே கொண்டுவருகிறார் லாயர் விவேக். இதனால் அம்மாவின் வெறுப்புக்கு ஆளாவதோடு தம்பி, தங்கையின் அலட்சியத்துக்கும் ஆளாகிறார் கார்த்தி.

வீட்டைவிட்டு வெளியேறும் கார்த்தியை கோடீஸ்வரர் நாகார்ஜுனா வீட்டில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார் விவேக்.. விபத்து ஒன்றில் கழுத்துக்கு கீழே உள்ள உடல் பாகம் முழுதும் செயலிழந்து சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும் நாகர்ஜூனாவுக்கு பணிவிடை செய்யும் வேலை அது. என்றாலும் அந்த வீட்டின் வசதியிலும் அங்கே செகரட்டரியாக வேலைபார்க்கும் தமன்னாவின் அழகிலும் கவரப்பட்டு இந்த வேலைக்கு ஒப்புக்கொள்கிறார்..

ஆனால் நாகார்ஜுனாவை மற்றவர்களை போல இல்லாமல் சராசரி மனிதர் என்கிற லெவலிலேயே வெகு அலட்சியமாக பராமரிக்கிறார் கார்த்தி.. இதுநாள்வரை தன் மீது இரக்கப்பட்ட மனிதர்களை மட்டுமே பார்த்துவந்த நாகர்ஜூனாவுக்கு, கார்த்தியின் அலட்சியம் ரொம்பவே பிடித்துப்போகிறது.. நாளடைவில் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு நட்பு பலமாகிறது.

நாகார்ஜுனாவின் நட்பு, கார்த்தியின் தங்கைக்கு பெரிய இடத்தில் விரும்பியபடி திருமணம் முடிக்க உதவுகிறது. திசைமாறி போகவிருந்த கார்த்தியின் தம்பியை காப்பற்றுகிறது. இதனால் கார்த்தி முதன்முறையாக தனது தாயின் அன்புக்கு பாத்திரமாகிறார்.. இன்னொரு பக்கம் தன்னை இந்த அளவுக்கு உயர்த்திய நாகார்ஜுனாவுக்கு கார்த்தி மட்டும் எதுவுமே செய்யாமலா இருப்பார்.. அவர் எதிர்பாராத சந்தோஷ தருணங்களை நாகார்ஜுனாவுக்கு திகட்ட திகட்ட அளிக்கிறார்.

இந்த சூழலில் தன்னை விட்டு விலகி உனது தாய்க்கு பிடித்தமான வாழ்க்கையை வாழு என கார்த்தியை வீட்டுக்கு அனுப்பும் நாகார்ஜுனா, அடுத்த சில நாட்களிலேயே கார்த்தி இல்லாமல் ரொம்பவே தனிமைப்பட்டு போகிறார்.. வீட்டைவிட்டு வெளியேறிய கார்த்தியின் மனமும் நாகார்ஜுனாவின் நினைவிலேயே அல்லாடுகிறது. மீண்டும் நாகார்ஜுனாவை தேடி வரும் கார்த்தி, அதிரடியான முடிவு ஒன்றை எடுக்கிறார். அது என்ன என்பதை சொல்லி சந்தோஷத்துடன் சுபம் போட்டு நம்மை வழியனுப்பி வைக்கிறது க்ளைமாக்ஸ்.

நட்பு பற்றி பல படங்களை பார்த்து இருப்போம்.. ஆனால் பெரும்பாலும் அவை சமவயது நட்பாகத்தான் இருக்கும்.. ஆனால் இங்கே கொஞ்சம் வயது வித்தியாசத்துடன் கூடிய இரண்டு ஆண்களின் நட்பை இவ்வளவு அழகாக கவிதையாக காட்சிப்படுத்த முடியுமா என்பதை காட்சிக்கு காட்சி மனம் நெகிழும்படி சாத்தியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வம்சி..

கார்த்தி, நாகார்ஜுனா என்கிற இரண்டு தண்டவாளங்களில் எந்தவித தடங்கலும் இல்லாமல் மொத்த கதையையும் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி.. இதுநாள் வரையிலான படங்களில் நாம் பார்த்த அதே துறுதுறு கார்த்தி தான் என்றாலும், இந்தப்படத்தில் ‘எங்கிருந்தோ வந்தான்’ என்கிற மாதிரியான அவரது கேரக்டர் வடிவமைப்பு அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது..

நாகர்ஜூனாவிடம் அவர் காட்டும் யதார்த்தமான அன்யோன்யம், தமன்னாவிடம் செல்ல சீண்டல், அம்மாவின் வெறுப்பை சம்பாதிப்பது, தம்பி தங்கையின் அலட்சியத்துக்கு ஆளாவது, நாகார்ஜுனாவை சந்தோஷப்படுத்த ஒவ்வொரு விதமாக மெனக்கெடுவது, தமன்னாவிடம் காதலை சொல்லப்போய் பல்பு வாங்குவது என படம் முழுவதும் நம்மை ஏதோ ஒரு விதத்தில நெகிழ, சிரிக்க, கண்கலங்க வைக்கிறார் கார்த்தி.

சக்கர நாற்காலியிலேயே படம் முழுவதும் வலம் வந்தாலும் கார்த்தியின் கதாபாத்திரத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத கம்பீர புருஷனாக நாகார்ஜுனா நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறார். தனது குறையை பெரிதாக நினைக்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பதும், உதவி என்கிற பெயரில் கார்த்தி பண்ணும் சேட்டைகளை ரசிப்பதும், பாரிஸுக்கு சென்றும் கூட ஈபிள் டவரை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் மருகுவதும் என நாகர்ஜூனா நிச்சயமாக தன்னையே இதில் புதிதாக உணர்ந்திருப்பார்.

செகரட்டரியாக வரும் க்யூட் தமன்னா எந்தவித அலட்டலும் இல்லாமல் கார்த்தியை மட்டுமல்ல, ரசிகர்களையும் செல்லமாக சீண்டுகிறார். அனுஷ்கா, ஸ்ரேயா இருவரின் சர்ப்ரைஸ் கெஸ்ட் என்ட்ரி ரெண்டு லட்டையும் ஒரு சேர சாப்பிட்ட சந்தோஷத்தை தருகிறது. பிரகாஷ்ராஜின் பாந்தமான நட்பு யதார்த்தம். கார்த்தி வரையும் ஓவியத்தை அவர் வாங்குவதையும் அதற்கு கார்த்திக்கே விளக்கம் தருவதையும் வைத்து படம் நெடுகிலும் வரும் ஓவிய காமெடி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

கொஞ்ச நேரமே வந்தாலும் விவேக்கின் பங்கு நிறைவு. கார்த்தியின் அம்மாவாக வரும் ஜெயசுதா, நாகர்ஜுனா வீட்டு பணிப்பெண்ணாக வரும் கல்பனா இருவரும் நேர்த்தியான கதாபாத்திரங்கள்.. பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல அழகோ அழகு.. நாகார்ஜுனா வீட்டின் பிரமாண்டம் ஆகட்டும், பாரீஸ் நகரத்தின் ஈபிள் டவர் காட்சியாகட்டும், அதே பாரீஸில் கார் சேசிங் காட்சிகளாகட்டும் படத்தில் கேமராவும் இன்னொரு ஹீரோ என சொல்லவைக்கிறது. கோபிசுந்தரின் இசையில் அந்த குத்துப்பாட்டு செமையான ஜுகல்பந்தி.

படம் முழுவதும் ஒவ்வொரு எபிசோடையும் ரசிகர்கள் அனுபவித்து ரசிக்கவேண்டும் என இயக்குனர் வம்சி மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.. தியேட்டரில் காணப்படும் ரசிகர்களின் உற்சாகத்தால் அதற்கான பலனும் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஒரு பிரெஞ்சு படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி கொடுத்ததில் தெலுங்கு இயக்குனர் வம்சி, மொழி என்கிற மாயையை அழகாக உடைத்திருக்கிறார்.

பார்த்தவர்கள் மீண்டும் ஒருமுறையும் பார்க்காதவர்கள் ஒருமுறையேனும் பார்த்தே ஆகவேண்டிய டைப் படம் தான் இந்த தோழா.