ஸ்ட்ரைக்கிற்கு ஒத்துழைக்காத விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்..?


டிஜிட்டல் சேவை வழங்கு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை ரத்து செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது. ஆனால் பிரச்சனை முடிவுக்கு வராததை தொடர்ந்து, மார்ச்-16 முதல் அனைத்து படப்பிடிப்புகள், பட விழாக்கள் அனைத்தையும் நிறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது..

இந்தநிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதிஷ்குமார் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதோ அவரது மனக்குமுறல்..

“அவனவன் வட்டிக்கு வாங்கி படமெடுத்து பெட்டிக்குள் வச்சிக்கிட்டு ஏதாவது நல்லது நடக்காதா… வரி குறைஞ்சுடாதா? நடிகர் சம்பளம் குறைஞ்சுடாதா? டிக்கெட் விலை, க்யூப் கட்டணம் இதுல ஏதாவது குறைஞ்சுடாதா? சினிமா வாழ்ந்துடாதான்னு ஏக்கத்துல அவனவன் வீட்டுல உட்கார்ந்துட்டிருந்தா..

அங்கே விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படம் மட்டும் விக்டோரியா ஹால்ல நடக்குமாம்? என்னப்பா ஸ்ட்ரைக் இது? தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, நடிகர் சங்கம் எல்லாம் கூட்டுசேர்ந்து அறிவிச்ச போராட்டத்துல எல்லோருமே இந்த படப்பிடிப்புல கலந்துக்கிட்டிருக்காங்களே எப்படி?

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒன்றுபட்டு நம் எதிர்ப்பைத் தெரிவிப்போம் என எல்லோரும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும்போது விஜய் படம் மட்டும் எப்படி படப்பிடிப்பு நடைபெறுகிறது?

அத்தனை கோடி இழப்புகளையும் தாங்கிக்கொண்டு காத்திருக்கும் மற்ற தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது? பெரிய தயாரிப்பாளர்.. நடிகர்… இயக்குநர் இதற்காக சங்கம் வளைந்துகொடுத்துவிட்டதா? மற்ற தயாரிப்பாளர்களை ஏமாளிகளாக நினைத்துவிட்டதா சங்கம்?

இது மிகப் பெரிய தவறு! தயாரிப்பாளர்களை பிரித்தாளும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேன் கூட்டைச் சிதைப்பதைப் போல தயாரிப்பாளர்களின் வலிமையை சிதைத்த இந்த செயல் முற்றிலும் தவறானது” என கண்டனம் தெரிவித்துள்ளார் ஜே.எஸ்.கே .