முதல் முயற்சியிலேயே சறுக்கிய விஷால்..!


நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் ஆக பொறுபேற்று ஓரளவு அதிரடியான விஷயங்களை செய்துவந்த விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் ஆனார். ஆரம்பத்தில் இருந்தே திருட்டு விசிடி, ஆன்லைன் பைரசி ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுத்துவரும் விஷால், இப்போது தலைவரனபின் இதற்கு முடிவுகட்ட நினைத்தவர், அரசின் கவனத்துக்கு இதை கோரிக்கியாக கொண்டு சென்றார்..

அத்துடன் நின்றுவிடாமல், இந்தப்பிரச்சனையை சரிசெய்யாவிட்டால் மே-30 முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவிப்பும் வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே விஷாலின் முடிவுக்கு எதிராகவே பலரும் கிளம்பினார்கள். விஷால் ஆதரவாளர்கள் சிலர் விஷாலின் பேச்சை நம்பி தங்களது படத்தின் ரிலீஸ் தேதிகளை மாற்றி வைத்தார்கள்..

ஆனால் இப்போது என்ன ஆச்சு..? தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்க, மத்திய அரசு ஜூன் முதல் புதிதாக விதித்துள்ள சேவை வரியும் பூதாகரமாக சேர்ந்துகொள்ள வேறுவழியின்றி போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார் விஷால். நடிகர் சங்கத்தில் சில திட்டங்களில் ஜெயித்து காட்டியவருக்கு, தயாரிப்பாளர் சங்கத்தில் முதல் முயற்சியே சறுக்கலாக அமைந்துவிட்டதே என வருத்தப்படுகிறார்களாம் விஷால் ஆதரவாளர்கள்.