பொதுவாக சினிமாவை வைத்து பிழைப்பு நடத்தும் தியேட்டர்காரர்களும் சினிமாவுக்கு டிஜிட்டல் சேவை வழங்குபவர்களும் தங்களது வருமானத்தில் தான் கண்ணாக இருப்பார்களே தவிர, தங்களுக்கு காலமெல்லாம் வேலையையும் வருமானமும் வழங்கும் தயாரிப்பளர்களின் நிலைபற்றி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்கள்.
இதில் தியேட்டர்காரர்கள் கூட காலம் காலமாக தயாரிப்பாளர்களுடன் ஓரளவு கஷ்ட நஷ்டத்தில் பங்கெடுத்தவர்கள் என விட்டுவிடலாம். ஆனால் சமீப வருடங்களில் முளைத்த டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களின் நியாயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க களத்தில் இறங்கிவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.
ஆம். தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்கவில்லை இந்த டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் (Digital Service Providers) .
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழக்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தமிழ்த் திரையுலகமும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த Digital Service Providers – க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
அதனால் இவர்களுக்கு எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச்-1ம் தேதி முதல் தங்களின் இந்த நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.