பைரவா – விமர்சனம்


படிக்கிற மாணவனுக்கும், கற்றுத்தருகிற ஆசிரியருக்கும் தகுதி இருக்கவேண்டும் என சொல்கிற அரசாங்கம் அந்த கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மட்டும் ஏன் தகுதியை நிர்ணயிக்க கூடாது என்றும் மனித உயிரை காப்பற்ற உதவும் மருத்துவக்கல்வி வீணர்களின் கையில் சிக்கி வியாபாரம் ஆகிவிடக்கூடாது என்கிற கருத்தையும் மையப்படுத்தி, வெளியாகியுள்ள படம் தான் ‘பைரவா’.

இதில் விஜய் படத்துக்குயுண்டான சகல மசாலாக்களையும் சேர்த்து கமர்ஷியல் கறிக்குழம்பு வைத்துள்ளார்கள். சென்னையில் கலெக்சன் ஏஜெண்ட்டாக வேலைபார்க்கும் விஜய்க்கு, ஒய்.ஜி.மகேந்திரன் மகள் திருமணத்துக்காக திருநெல்வேலியில் இருந்து, வருகின்ற கீர்த்தி சுரேஷை கண்டதும் காதல் வருகிறது..

அவர் ஊருக்கு திரும்புவதற்குள் காதலை சொல்லிவிட முயற்சிக்கும் விஜய்க்கு திருநெல்வேலியில் கீர்த்தி சுரேஷ் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கிறார் என்பது தெரியவருகிறது. திருநெல்வேலியில் அடிப்படை வசதிகளே இல்லாமல் மெடிக்கல் காலேஜ் நடத்திவரும் ரவுடியான ஜெகபதிபாபுவின் அராஜகமும் அவரது சூழ்ச்சியில் பலியான கல்லூரி மாணவியின் மரணமும் அதற்காக கீர்த்தி நடத்தி வரும் போராட்டமும் தெரிய வருகிறது.

அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கூடவே கீர்த்தி சுரேஷின் காதலுமுமாக எல்லம் சேர்த்து திருநெல்வேலிக்கு அழைத்து வருகின்றன. நெல்லை வந்து இறங்கிய கணத்தில் இருந்து விஜய்க்கும் ஜெகபதிபாவுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் மீதிப்படம்..

விஜய்க்கு விளையாடுவதற்கு நிறைய இடம் உள்ள கதை தான்.. ஆனால் காதல், லோக்கல் ஏரியா கிரிக்கெட் பைட் என விஜய்யை கொஞ்சம் ரிலாக்ஸாக விட்டிருக்கிறார்கள். விக் வைத்த விஜய் புதிதாக இருக்கிறார்.. ஆக்சன் காட்சிகளில் தெறிக்கவிடும் விஜய், காதல் காட்சிகளில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ண தவறுகிறார்.. இல்லையில்லை ஸ்கோர் பண்ணும்படியான காட்சிகள் இல்லை என்றுகூட சொல்லலாம்.

கோயம்பேடு ஆம்னி பஸ்டாண்ட் சண்டைகாட்சியில் அதிரவைக்கிறார் விஜய். சமீபகாலமாக வரும் விஜய் படங்களில் உள்ள மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டே அவர் எல்லா வசனங்களையும் பஞ்ச் வசனமாகவோ, அல்லது கிண்டல் வசனமாகவோ பல்லை கடித்துக்கொண்டு பேசுவதுதான். இதிலும் அதற்கு குறைவில்லை.. அடுத்துவரும் இயக்குனர்களாவது அதை மாற்றுவார்களா என பார்க்கலாம்.

மருத்துவ கல்லூரி மாணவியான கீர்த்தி சுரேஷை வெரைட்டி மீல்ஸ் கணக்காக காதல், செண்டிமெண்ட், கோபம் என கனகச்சிதமாக கலந்து கமர்ஷியல் கதாநாயகியாக உலவ விட்டிருக்கிறார்கள். இன்னொரு கதாநாயகியாக பிளாஸ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பால் மனதில் நிற்கிறார் அபர்ணா வினோத்.

வில்லன் ஜெகபதி பாபு.. வழக்கம்போல தனது ரவுடித்தனத்தால் மற்றவர்களை மிரட்டி, ஆனால் ஹீரோவிடம் சிக்கி சின்னாபின்னப்படும் கேரக்டர்.. இம்மி பிசகாமல் செய்திருக்கிறார்.. அடியாளாக டேனியல் பாலாஜி.. ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி பின் அப்ரூவர் ஆகி அநியாயத்திற்கு உயிரை விடுகிறார். விஜய்க்கு உதவுவதற்கே சதீஷுக்கு நேரம் சரியாக இருப்பதால் காமெடி ஏரியாவில் சரக்கு குறைச்சல் தான். நான் கடவுள் ராஜேந்திரனையும் வீணடிக்கவே செய்திருக்கிறார்கள்.

கெட்டவராக இருந்து நல்லவராக மாறும் ஹரீஷ் உத்தமன், அவரது மனைவியாக வரும் ‘றெக்க’’ புகழ் மாலாக்காவான ஷிஜா ரோஸ், அபர்ணாவின் தந்தை விஜயராகவன், நட்புக்காக ஒய்.ஜி.மகேந்திரன் என அவரவர் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தில் வரும் பாடல்களுக்கு விஜய் ரசிகர்கள் எழுந்து ஆடுகிறார்களே தவிர, அவரது முந்தைய படங்களின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட பொதுவான ரசிகர்களுக்கு குறைவான தீனியையே தந்திருக்கிறார். கமர்ஷியல் படங்களுக்குண்டான வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

பெரிய மனிதர்கள் போர்வையில் கல்லூரி நடத்திவரும் ரவுடிகள் பற்றியும் அவர்களது கல்லூரி நிர்வாகம் பற்றியும் அவ்வப்போது செய்தித்தாள்களில் படிக்க நேர்வதால் கதையின் உண்மைத்தன்மை நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஆனால் ஆக்சன் காட்சிகளுக்கு வசதியாகவும் ஹீரோவை மாஸ் ஆக காட்டவும் லாஜிக் இல்லாத பல காட்சிகளை உள்ளே நுழைத்திருக்கிறார் இயக்குனர் பரதன்.

விஜய் டபுள் ஆக்சனில் நடித்திருக்கிறார் என்கிற ஒரு எதிர்பார்ப்பை பரப்பிவிட்டு ஏமாற்றியதை தவிர, விஜய் ரசிகர்களுக்கு நிறைவான படமாகவே தந்திருக்கிறார் இயக்குனர் பரதன்.