அழகென்ற சொல்லுக்கு அமுதா – விமர்சனம்


வேலைவெட்டியில்லாமல் ஊரைசுற்றும் தண்டச்சோறு ரீஜன் சுரேஷ். மொபைல் கடையில் வேலைபார்க்கும் ஆர்ஷிதாவை பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது.. அதன்பின் காதல் என்கிற பெயரில் காதலியை கைபிடிக்க அவர் அடிக்கும் கூத்துக்கள் தான் மொத்தப்படமும்.

பொதுவாக ஒரு படத்தின் கதாநாயகன் அதி புத்திசாலியாகவோ, அல்லது சுமாரான அறிவுள்ளவனாகவோ, அல்லது அடி முட்டாளாகவோ கூட காண்பிக்கப்பட்டது உண்டு.. இயல்பிலேயே மந்த குணமுடைய ஒருவனையும் தன காதலியை கைபிடிக்க, அவனுக்கு தெரிந்த அளவில் அவன் பண்ணும் முயற்சிகளையும் வைத்து ஒரு படம் வந்திருக்கிறது என்றால் அது இந்தப்படமாகத்தான் இருக்கும்…

கதாநாயகன் ரீஜன் படத்தில் மட்டும் தான் இப்படியா, இல்லை நிஜத்திலும் கூட இப்படித்தானா என சந்தேகப்படும் அளவுக்கு எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரியான ஆளாக தெரிகிறார்.. படம் முழுவதும் இளித்தபடி, இழுத்து இழுத்து பேசுவது எரிச்சலடைய வைத்தாலும் போகப்போக நமக்கே பழகி விடுகிறது. காதலுக்காக அவர் பண்ணும் கூத்துக்கள் அனைத்தும் வடிகட்டின முட்டாள் தனமாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நம்மால் சிரிக்காமல் இருக்கவும் முடியவில்லை..

ஜாடிக்கேத்த மூடியாக சரியான தேர்வு ஆர்ஷிதா. காதல் என்கிற பெயரில் ரெஜின் கொடுக்கும் டார்ச்சர்களை சமாளிக்கும் கேரக்டரில் நடித்ததற்காவே அவரை மீட்டருக்கு மேல் பாராட்டலாம். படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கதாபாத்திரங்களும் ஓரளவு சரியாகவே நடித்திருக்கிறார்கள்.. அதிலும் தாதாவாக வரும் வளவன் அன் கோ அடிக்கும் கூத்துக்கள் ரசிக்க வைக்கின்றன.

நாகராஜன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. இதெல்லாம் ஒரு படமா என்று சொல்லவும் அட இப்படியெல்லாம் கூட படம் எடுக்கலாமா என்கிற கேள்வியையும் ஒருசேர ரசிகர்களுக்குள் எழுப்பி அனுப்புகிறார். அமெச்சூர்தனமாக இருந்தாலும் இது ஒரு புது முயற்சி என்பதை படத்தை பார்த்தால் மட்டுமே அது புரியும்.