தியா ; விமர்சனம்


ஹாரர் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இப்படி ஒருபடத்தை இயக்குனர் விஜய்யை எடுக்க வைத்தததா, இல்லை தன்னை பாதித்த சமூக நிகழ்வு ஒன்றை இப்படி ஹாரர் வாயிலாக சொல்லாலம் என நினைத்தாரா என்பது விஜய்க்கே வெளிச்சம்… மற்றபடி நெகிழவைக்கும் ஹாரர் படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..

கல்லூரியில் படிக்கும்போதே காதலர்களாகும் சாய்பல்லவிக்கு நாக சவுர்யாவுக்கும் ஆரம்பத்தில் எதிர்ப்பு கட்டினாலும், ஐந்து வருடங்கள் படிப்பு முடிந்தபின் அவர்கள் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர் அவர்களது பெற்றோர்கள். ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நாக சவுர்யாவின் அப்பா நிழல்கள் ரவி, சாய்பல்லவியின் அம்மா ரேகா, மாமா ஜெயகுமார், டாக்டர் சுஜிதா என ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணத்தை தழுவுகின்றனர்.

போகப்போக சாய்பல்லவிக்கு இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தெரியவர அதிர்ச்சியாகிறார். மேலும் இதில் அடுத்த குறி தனது கணவன் நாக சவுர்யா தான் என்பதையும் அறிந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார்.. நாக சவுர்யாவையும் குறிவைப்பதற்கான காரணம் என்ன..? கொலைக்கான பின்னணி என்ன..? கொலை என்றால் செய்வது யார்..? இத்தனை மரணங்களுக்கும் காரணம் யார்..? என இடைவேளைக்குப்பின் முடிச்சு அவிழ்கின்றது.

படம் முழுக்க சாய்பல்லவிக்கு, மிகவும் கனமான நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்.. அதனால் தான் தமிழில் தன்னுடைய அறிமுகப்படமாக இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் போலும்.. குறிப்பாக கருவில் கலைக்கப்பட்ட தனது மகள் ஆவியாக தனது வீட்டிலேயே இருப்பதை அவர் உணரும் இடம் செம த்ரில்லிங். தமிழுக்கு புதுமுகமாக அறிமுகமாகியுள்ள நாக சவுர்யா கதைக்கு தேவையான பங்களிப்பை தந்து, படத்துடன் இயல்பாக ஒன்றியுள்ளார்.

போலீஸ் அதிகாரியாக வந்தாலும் அதிலும் தனது ட்ரேட் மார்க் நகைச்சுவையுடன் கலக்குகிறார் ஆர்ஜே பாலாஜி. படம் முழுதும் வசனமே இல்லாமல் தனது க்யூட்டான நடிப்பால் நம்மை கவர்ந்து விடுகிறார் பேபி வெரோனிகா. சக நடிகர்களான நிழல்கள் ரவி, ரேகா, சந்தான பாரதி, சுஜிதா, ஜெயக்குமார், குமரவேல் என பலரும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.. மனோதத்துவ டாக்டராக வருடம் எடிட்டர் ஆண்டனியும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

சாம் சி.சி.எஸ்ஸின் பின்னணி இசையும் ஆலாலிலோ பாடலும் மனதை உருக்குகிறது. அபார்ட்மென்ட் காட்சிகளில் மனதை அள்ளுகிறது நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு. முதன்முதலாக ஹாரர் ஏரியாவில் கால் வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.. ஆனாலும் தனது பாணியிலான சென்டிமென்ட்டையும் படம் நெடுக இழையோட விட்டுள்ளார்.. கருக்கலைப்பு என்பது எவ்வளவு மோசமான விஷயம் என்பதை மிக ஹாரர் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்.