இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்


நாயகன் தினேஷ் சென்னையில் உள்ள இரும்பு குடோன் ஒன்றில் பணிபுரிந்து வரும் லாரி ஒட்டுநர்.
ஒரு நாள் மகாபலிபுரம் கடற்கரையில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு குண்டு கரை ஒதுங்குகிறது. இதைப்பார்த்து பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். காவல்துறையினர் அந்தக் குண்டை கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு திருடு போகிறது. அந்தக் குண்டு நாயகன் தினேஷ் பணிபுரியும் இரும்பு குடோனுக்கு வந்தடைகிறது.

திருடப்பட்ட குண்டை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காவல்துறையினர் கண்டுபிடிக்கும் முன் அதைக் கண்டுபிடித்து மக்களிடையே ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கம் தேடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள குடோனுக்கு லாரியில் எடுத்துச் செல்லும் தினேசுக்கு அது ஒரு சக்தி வாய்ந்த குண்டு என்பதை தெரிய வருகிறது.

நாயகன் தினேஷ் அந்தக் குண்டை என்ன செய்தார்? காவல்துறையினர் குண்டு கிடைத்ததா? சமூகநல மாணவர்களுக்கு கிடைத்ததா? குண்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதா? இல்லை வெடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இரும்பு கடையில் பணிபுரிபவராக கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார் தினேஷ். அவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. மிகச் சிறந்த கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். தான் எடுத்து வந்தது குண்டு என்று தெரிந்து பதற்றமடையும் போது தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது.

நாயகி ஆனந்தி கிராமத்து பெண்ணாக வந்து ரசிகர்களைக் கவர்கிறார். நிருபர் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளார் ரித்விகா.

முனிஷ்காந்த் சிறப்பாக நடித்துள்ளார். பஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் இவரின் வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களைக் கவர்கிறது.

இரும்பு கடை முதலாளியாக வரும் மாரிமுத்து, தரகர் ஜான் விஜய், தினேஷ் நண்பராக வரும் ரமேஷ் திலக், திருடனாக ஜானி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். போலீசாக நடித்திருக்கும் லிங்கேஷ் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

ஒரே ஒரு குண்டை வைத்து, காதல், சென்டிமெண்ட், ஜாதி, அரசியல், காமெடி ஆகியவற்றை கலந்து மிகப் பிரமாதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் அதியன் ஆதிரை.

படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது வசனங்கள் குண்டுகள் பற்றி சொன்ன விதம் அருமை.

டென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணியில் மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் பின்னணி இசையின் மூலம் பார்ப்பவர்களை பயப்பட வைக்கிறது.
கிஷோரின் ஒளிப்பதிவு படத்திற்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட்.

மொத்தத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய மிகச்சிறந்த திரைப்படம்.