‘நடுவன்’ விமர்சனம்

பரத், ஒருவரை கொலை செய்ய திட்டமிடுகிறார். யாரை, எதற்காக கொலை செய்யப் போகிறார், என்பதை பல திருப்பங்களோடும், சுவாரஸ்யமாகவும் சொல்வது தான் ‘நடுவன்’ படத்தின் கதை.

குடும்பத்திற்காக உழைக்கும் ஆண்களை தனது நடிப்பால் பிரதிபலித்திருக்கும் பரத், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் தடுமாறும் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பரத்தின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா வினோத், அமைதியான முகமும், எளிமையான அழகும் நிறைந்தவராக இருக்கிறார். பெரிய அளவில் வசனங்கள் இல்லை என்றாலும், பல இடங்களில் கண்களால் நடித்திருப்பவர், சிறு சிறு உணர்வுகள் மூலமாகவும் கவனிக்க வைக்கிறார்.

பரத்தின் நண்பராக நடித்திருக்கும் கோகுல் ஆனந்த், ஜார்ஜ் மரியான், யோகி ஜெயபி, அருவி பாலா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

எளிமையான கதையாகவும் இருந்தாலும், அதை புதிய வழியில் சொல்லி, முழு படத்தையும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் ஷாரங்.

திரைக்கதையின் வேகம், ஊட்டியின் அழகு என இரண்டையும் ஒரே நேரத்தில் நம்மை அனுபவிக்க வைக்கும் ஒளிப்பதிவார் யுவா மற்றும் இசையமைப்பாளர் தரன் ஆகியோரது பணி இயக்குநருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. சாதாரணமான கதையை கூட, இப்படி ஒரு வழியில் சொல்லி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் படத்தொகுப்பாளார் சன்னி சவுரவ்.

பரத் யாரை, எதற்காக கொலை செய்யப் போகிறார்? என்ற கேள்வியை ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மனதில் எழுப்பி, கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர், ஒரு கட்டத்தில் அந்த சஸ்பென்ஸை உடைத்தாலும், பரத் அவரை கொலை செய்துவிடுவாரா அல்லது பரத்துக்கு எதாவது நேர்ந்துவிடுமா? என்ற மற்றொரு கேள்வியை நம் மனதில் எழுப்புகிறார். இப்படி அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு நம்மை படத்துடன் பயணிக்க வைப்பவர், இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டோடு படத்தை முடிப்பது, முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.