தொண்டன் – விமர்சனம்


சமுத்திரக்கனி படம் என்றாலே சமூக உணர்வுள்ள படம் தான்.. அதிலும் தொண்டன் என பெயர் வைத்திருப்பதால் அரசியலையும் இதில் ஒரு பிடி பிடித்திருப்பாரோ என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுகிறது.. அந்த எதிர்பார்ப்பை சரியாக ஈடுகட்டி இருக்கிறாரா சமுத்திரக்கனி..?

மிலிட்டிரியில் இருந்து பாதியிலேயே வந்துவிட்ட சமுத்திரக்கனி ஆம்புலன்ஸ் ட்ரைவராக வேலை பார்க்கிறார். சாகக்கிடப்பவன் நல்லவனா, கெட்டவனா என்றெல்லாம் பார்க்காமல் அந்த உயிரை காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைத்து வண்டி ஓட்டுகிறார்.. அப்படி ஒருவரை காப்பாற்றப்போய் அரசியல்வாதியான நமோ நாராயணின் பகையை சம்பாதித்துக்கொள்கிறார்.

இதை தொடர்ந்து தனது தம்பி சாவுக்கும் சமுத்திரக்கனி தான் காரணம் என தவறாக புரிந்துகொள்கிறார் நமோ நாராயணன். அடுத்ததடுத்த ஏதேச்சையான நிகழ்வுகள் சமுத்திரக்கனியின் மீதான கோபத்தை அதிகரிக்க, அவர் வீட்டிலேயே குண்டு வீசுகிறார் நமோ.. உயிர்ச்சேதம் இல்லாவிட்டாலும் கூட பேரிழப்பை சந்திக்கும் சமுத்திரக்கனி, நமோ நாராயணனுடன் நேரடியாக மோதாமல், அதேசமயம் மீண்டும் அவர் தன்னுடைய பாதையில் குறுக்கிடாமல் இருக்க வித்தியாசமான ஒரு முடிவெடுக்கிறார்.

அவரது முடிவும் முயற்சியும் அவருக்கு கைகொடுத்தா..?

ஆம்புலன்ஸ் ட்ரைவராக சமுத்திரக்கனிக்கு பொருத்தமான கேரக்டர்தான். உயிர் காக்க போராடும் காட்சிகளில் அதை நிரூபிக்கவும் செய்கிறார்.. சமூக கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் நச்சென அமைந்தாலும் ஒரு ஹீரோவாக சமுத்திரக்கனிக்கு காதல் காட்சியும் காமெடியும் மற்றும் ஒர்க்அவுட் ஆக மறுக்கிறது.

இன்னொரு ஹீரோவாக விக்ராந்த்.. இவரது கேரக்டரும் அவருக்கும் சமுத்திரக்கனிக்குமான நட்பும் ஆரம்பத்தில் நமக்கு குழப்பத்தையே தந்தாலும், பிற்பாடு வரும் காட்சிகளில் பக்குவப்பட்ட நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் விக்ராந்த். நபனை அண்ணன் என அழைத்துக்கொண்டே அவர் தஹ்ன்கையை டாவடித்து டீஸ் செய்வதையும் அதை சமுத்திரக்கனி பொறுமையுடன் அன்கேகரிபதையும் நம்மால் ஏற்க முடியவில்லை.

கதாநாயகியாக சுனைனா.. ஒரு டீச்சரான அவர் சமுத்திரக்கனியை சந்தித்து காதலை சொல்வதற்காக செய்யும் முயற்சி சரியான கேலிக்கூத்து. ஆனால் நடிப்பில் குறையொன்றுமில்லை.. சமுத்திரக்கனியின் தங்கையாக இன்னொரு நாயகியாக வரும் அர்த்தனா நடிப்பில் நேர்த்தி.. பல காட்சிகளில் ‘சமுத்திரம்’ பட காவேரியை நினைவூட்டுகிறார்.

க்ளைமாக்ஸில் கொஞ்ச நேரமே வந்தாலும் வீட்டில் ரெய்டு நடக்கும் காட்சிகளில் சூரியும் சமுத்திரக்கனியும் அப்ளாஸ் அள்ளுகிறார்கள். அட நமோ நாராயணன் முழு நீள வில்லன் ஆகிவிட்டாரே சபாஷ்.. கஞ்சா கருப்பு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.. நல்ல போலீசாக ‘போராளி’ திலீபன், கெட்ட போலீசாக அனில் முரளி (படத்தில் அவருக்கு பெயர் உத்தமன்), பிள்ளையால் அரசியல் வாழ்க்கையை தொலைக்கும் நல்ல மந்திரியாக கு.ஞானசம்பந்தன், சமுத்திரக்கனியின் அப்பாவாக வேல ராமமூர்த்தி என கதாபாத்திர தேர்வில் எந்த குறையும் இல்லை.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் போகப்போக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், ஒரு கோர்வையாக இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனம்.. ஜல்லிக்கட்டு, நெடுவாசல் பிரச்சனைகளை சொலவேண்டும் என்பதற்காக தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நேரத்தில் அதை புகுத்தி இருப்பது ரொம்பவே செயற்கை.. எதிரியை நேரடியாக அழிக்க நினைக்காமல் அவனை திசை திருப்பிட வேண்டும் என புதிய ரூட்டை இதில் பிடித்துள்ளார் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி நடிக்கும் படம் என்றாலே அதில் சமூக அக்கறையுடனான வாசனைகள் தெறிக்கும்.. இது அவரது படம் கேட்கவா வேண்டும்..? கிடைக்கும் இடத்தில் எல்லாம் சமூக அவலங்களை சாடுகிறார். அறிவுரைகளை அள்ளி எறிகிறார். ஒட்டுமொத்த மனக்குமுறலையும் மொத்தமாக கொட்டியிருக்கிறார்.. என்ன கொஞ்சம் ஓவர் டோஸாக போய்விட்டது அவ்வளவுதான்.