விக்ரம் வேதா – விமர்சனம்


நடிப்பு பசி கொண்ட இரண்டு ஹீரோக்களை வைத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக உருவாகி இருக்கும் படம் தான் விக்ரம் வேதா.. போலீஸ்-ரவுடி என்கவுண்டர் கதையை விக்கிரமாதித்தன் வேதாளம் காலத்து கதைசொல்லும் உத்தியில் படமாக்கி இருக்கின்றனர் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி.

என்கவுண்டர் டீமில் முக்கியமானவர் விக்ரம் (மாதவன்).. டீம் லீடர் பிரேம்.. ரவுடி வேதா (விஜய்சேதுபதி) மற்றும் அவரது கூட்டாளிகளை போட்டுத்தள்ளுவது தான் இவர்களது அசைன்மென்ட்.. இரண்டு கட்டமாக நடக்கும் என்கவுண்டரில் வேதாவின் தம்பி, கதிர், தம்பியின் காதலி வரலட்சுமி ஆகியோரும் போலீஸ் தரப்பில் பிரேமும் பலியாகின்றனர்.

வேதாவை இரண்டுமுறை டார்கெட் பண்ணி பிடித்தும் விக்ரமால் அவரை கொல்ல முடியாமல் போகிறது.. தான் யார், தன்னை சுற்றி நடப்பது என்ன, அதில் எது நியாயம், எது அநியாயம் என வேதாளம் போல கேள்வி கேட்டு இந்த விக்ரமாதித்தனை குழப்பி விடுகிறான். குழம்பிய விக்ரமுக்கு இந்த கேஸில் புதிய தெளிவுகள் கிடைக்கின்றன.. வேதா கெட்டவனா, அல்லது தானும் தன்னை சார்ந்தவர்களும் கெட்டவர்களா என்கிற கேள்விக்கு விடையும் கிடைக்கிறது..

ஆனால் விக்ரம் இறுதியில் நியாய தர்மத்திற்கு உட்பட்டு நடக்கிறாரா, இல்லை சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறாரா, விக்ரம்-வேதா இவர்களுக்கு இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் குறுக்கிடும் கறுப்பு ஆடுகள் யார் என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.

ரவுடிக்கு அவன் தரப்பு நியாயம், போலீஸுக்கு அவர்கள் தரப்பு நியாயம் என இரண்டு பக்கங்களையும் சரியாக அலசி இருக்கிறது இந்த விக்ரம் வேதா.. போலீஸ் அதிகாரிகள் நடத்தும் என்கவுன்ட்டர்களில் எந்த அளவுக்கு நியாயமும் மக்களின் பாதுகாப்பிற்கான ஆதரவும் இருக்கிறது என்பதைவிட, அதில் போலீஸ் அதிகாரிகளின் சொந்த வாழ்கை சுயநலம் தான் அதிகம் தலைவிரித்து ஆடுகிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல பளிச்சென சமரசம் பண்ணிக்கொள்ளாமல் சொல்லியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி.

மாதவனும் விஜய்சேதுபதியும் இந்த இரண்டு கதாபாத்திரங்களை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள்.. இருவருமே துரோகங்களை சந்திக்கும் தருணத்தை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார்கள்.. போலீஸ்-ரவுடி இருவருக்குமான உடல்மொழியில் இருவருமே கெத்து காட்டுகிறார்கள்.. அதேபோல மாதவனும் விஜய்சேதுபதியும் தங்களுக்குள் பரிசு பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் செம.

மாதவனின் மனைவியாக கோபமும் ரொமான்ஸுமாக ரசிக்கவைக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பின் தொடர்ந்து வேதாவை பிடிக்க நினைக்கும்போது, ஒரு லாயராக தனது பக்க நியாயம் பற்றி கணவரிடம் வாதாடும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பு..

கதிரின் ஜோடியாக இன்னொரு நாயகியாக வரலட்சுமி.. தன்னை விட வயது குறைந்த கதிரை காதலிப்பதும், விஜய்சேதுபதி எது சொன்னாலும் அதற்கு ‘அக்காங்’ என திரும்ப திரும்ப பதில் சொல்வதுமாக சிரிக்கவும் சிலிர்க்கவும் வைக்கிறார். கதிருக்கு இதில் சொல்லிக்கொள்ளும்படியான ‘நச்’ கேரக்டர்.. விஜய்சேதுபதியின் தம்பியாக தனது பொறுப்பை திறம்பட செய்திருக்கிறார்.

வில்லன் தரப்பில் ரவுடி கும்பலின் தலைவராக ஹரீஸ் பெராடி, கையாட்களான விவேக் பிரசன்னா ஆகியோரும் பொருத்தமான தேர்வு. போலீஸ் என்கவுன்ட்டர் டீமில் சைமன் கேரக்டரில் வரும் பிரேம் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அனைத்து காவலர்களும் ஒவ்வொரு விதமாக நம் கவனம் ஈர்க்கிறார்கள்..

விஜய்சேதுபதி-மாதவன் இருவருக்குமான வசன காட்சிகள் பிரமாதம்.. அவ்வபோது பின்னணி இசையிலே பயத்தை ஏற்படுத்துகிறார் இசையமைப்பாளர் சாம். ‘வாழ்க்க வளைஞ்சு நெளிஞ்சு’ பாடல் கேட்கும்போதே சுறுசுறு என இருக்கிறது.. மனிதர்களின் கருப்பு வெள்ளை பக்கங்களை புதுவிதமான கலரில் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்.

போலீஸ்-ரவுடி என்கவுன்ட்டர் கதை தான் என்றாலும் அதில் புதிய அணுகுமுறையை கையாண்டு கதை சொன்ன யுத்திக்காகவே படத்தை தியேட்டருக்கே போய் பார்க்கலாம்.