யாழ் – விமர்சனம்


இலங்கையில் நடந்த போர் மற்றும் கொடுமைகள் குறித்து அவ்வப்போது சில படங்கள் தமிழில் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டத்தில் அந்த போரையும், அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் படமாக காட்டுகின்றனர். அந்தவகையில் இப்போது வெளியாகி இருக்கும் ‘யாழ்’ திரைப்படமும் இலங்கை தமிழர்களின் அவலகரமான வாழ்வியலை வேறு ஒரு கோணத்தில் அலசியிருக்கிறது.

இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும் போது கன்னி வெடிகளுக்கிடையே இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவவங்களின் மூன்று கதைகளின் கோர்வை தான் யாழ் படத்தின் கதை.

விடுதலைப் புலி தமிழ்செல்வி என்று நினைத்து கைக்குழந்தையுடன் இருக்கும் அப்பாவி அபலைப்பெண்ணான நீலிமாவை துரத்துகையில் கன்னி வெடியில் காலை வைத்து விடுகிறார் சிங்கள ராணுவ வீரர் டேனியல் பாலாஜி. இடத்தை விட்ட நகர முடியாமல் தவிக்கும் டேனியல் பாலாஜி நீலிமா ராணியை குழந்தையை காரணம் காட்டி மிரட்டுகிறார். இறுதியில் டேனியல் பாலாஜியிடமிருந்து நீலிமா தப்பித்து குழந்தையை காப்பாற்றினாரா? என்பது முதல் கதை.

இரண்டாவது கதையில் வினோத் தான் காதலிக்கும் லீமா பாபு ஊரை விட்டு போவதை பார்த்து தானும் உடன் செல்ல கிளம்புகிறார். வழியில் தாயை காணாமல் தவிக்கும் அனாதையாக தவிக்கும் பேபி ரக்ஷனாவை பார்த்ததும் வேறு வழியின்றி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் வினோத். இதில் நேரம் போய்விட காதலி உட்பட அனைவரும் படகில் சென்று விடுகின்றனர். இறுதியில் வினோத் என்ன முடிவெடுத்தார்..?

மூன்றாவது கதையில் தன் காதலன் சசிகுமாரை தேடி, தன்னுடன் அழைத்து செல்ல லண்டனிலிருந்து மிஷா கோஷல் இலங்கைக்கு வருகிறார். ஆனால் சசிகுமாரோ கன்னிவெடியில் இறந்த தனது தாயின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் நிலத்தில் இருக்கும் கன்னி வெடிகளை அகற்றிய பிறகே லண்டன் வருவதாக சொல்கிறார். சசிகுமாரை மிஷா சமாதனம் செய்து அழைத்துச் சென்றாரா? இல்லையா? என்பதே க்ளைமேக்ஸ்.

இந்த மூன்று கதைகளில் நடித்த வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார், சுப்பிரமணி;, மிஷா கோஷல், நீலிமா ராணி, லீமா பாபு ஆகியோருடன் பேபி ரக்ஷனா சிறப்பாகவும், இயல்பாகவும் நடித்திருப்பது படத்தின் தத்ரூபமான காட்சிகளுக்கு மேலும் மெருகுட்டுகிறது.

ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்களது இன்னல்களை சொல்லும் படமாக ’யாழ்’ இருந்தாலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் மூன்று கதைகளும், அதற்கான திரைக்கதையும் விறுவிறுப்பாக நகர்கிறது

ஏ.கருப்பையா, எம்.நஷீர் ஆகிய இருவரின் ஒளிப்பதிவு இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவி மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு அனாதைகளாகவும், அகதிகளாகவும் நடைப்பயணம் செல்வதையும், சிங்கள ராணுவத்தின் கெடுபிடி களையும், வானத்திலிருந்து விழும் குண்டு மழையிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஈழத் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளை தேடி ஒடுவதும், மூன்று வித பரிணாமங்களில் கதையை நகர்த்தி அச்சு அசலாக காட்சிக் கோணங்களில் தந்து அசத்தியிருக்கின்றனர்.

எஸ்.என் அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருப்பதோடு அழகான வரிகள் கேட்க கேட்க தமிழின் இனிமை காதில் ஒலித்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

இலங்கையில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு மணி நேரத்தில் நடக்கும் கதையில் மூன்று வித கதைகள் தனித்தனியாக பயணித்து யாழ் இசைக்கருவியோடு தொடர்புபடுத்தி கடையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த். வித்தியாசமான முயற்சியில் ஈழத் தமிழர்களின் பேச்சு, போராட்டங்கள், அவலங்கள், வாழ்வியலை யதார்த்தமாக மனதை தொடும்படி படம் பிடித்து தனித்தன்மையோடு வெளிப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமல்ல இலங்கையில் நடக்கும் போரை மட்டுமே மையப்படுத்தாமல், அந்த மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள் பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் சொன்னவிதம் தான் இந்தப்படத்தை வித்தியாசப்படுத்துகிறது.