சர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..!


சினிமா தயாரிப்பாளராகவும் சில படங்களில் வில்லனாகவும் நடித்துவந்த ஆர்.கே.சுரேஷ் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள படம் பில்லா பாண்டி. இந்தப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக பில்லா பாண்டி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீஸாகிறது.

விஜய் படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் பல பெரிய நடிகர்களின் படங்களே தங்கள் ரிலீஸை தள்ளிப்போட்டு விட்ட நிலையில் என்ன தைரியத்தில் இவர்கள் படத்தை வெளியிடுகிறார்கள் என்பது சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தான் தெரிந்தது.

ஆம்.. தீபாவளிக்கு அஜித் படம் வெளியாகாத குறைய அவரது ரசிகராக ஆர்கே.சுரேஷ் நடித்துள்ள இந்தப்படம் ஓரளவு நிவர்த்தி செய்யும் என்கிற தைரியத்தில் தான் தீபாவளியன்றே இந்தப்படத்தையும் தில்லாக வெளியிடுகிறார்கள்.

அதனால் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் முழுதும் அஜித் ரசிகர்களை அள்ளிக்கொண்டு வந்து அமர்க்களப்படுத்தி விட்டார் ஆர்.கே.சுரேஷ்.

அஜித் ரசிகர்களில் கால்வாசி பேர் இந்தப்படத்தை பார்த்தாலே அது பில்லா பாண்டியை சூப்பர் ஹிட்டாக்கி, வசூலையும் வாரி கொடுத்துவிடும் என்பதுதான் ஆர்.கே.சுரேஷின் கணக்கு.. கூட்டிக்கழிச்சு பார்த்தா கணக்கு சரியா தான் வரும்போல தெரிகிறது.