கைவிடப்பட்ட ‘கான்’ ; சிம்புவின் சினிமா வாழ்க்கை இனி என்னாகும்..?

தந்தை அருமையான இயக்குனர். சகலகலா வல்லவர். மகனை சிறுவயதிலேயே நடிக்க வைத்து மக்கள் மனதில் அவரையும் ஒரு நடிகனாக பதியவைத்தார். வளர்ந்து பெரியவனானதும் மகனை கதாநாயகனாக்கி முதல் அடியை எடுத்துவைக்க உதவி செய்தார். இதைவிட தந்தையான டி.ராஜேந்தரால் மகன் சிம்புவுக்கு என்ன பண்ணித்தர முடியும்.. சொல்லுங்கள்..?

கூட்டிக்கழித்து பார்த்தால் சிம்பு நடித்த மூன்று படங்கள் மட்டுமே ஹிட் ரகத்தில் சேரும். இன்னும் ஒரு சில ஆவரேஜ் வகையறா.. மற்றதெல்லாம் பிளாப் லிஸ்ட்டில் இடம் பிடித்தவை தான். வளர்ந்து வரும் நேரத்தில் சரியான படங்களை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, சரியான நேரங்களில் படத்தை ரிலீஸ் செய்வதை விட்டுவிட்டு திரையுலகில் அனைத்தையும் கற்றுக்குடித்தவர் போல தனக்குத்தான் எல்லாம் தெரியும் என இறுமாப்புடன் உலா வந்தார் சிம்பு..

விளைவு இரண்டுமுறை காதலில் விழுந்தார். இரண்டு பேரையுமே தனது அடாவடி கேரக்டரால் பிரிந்தார். பட ஷூட்டிங்குகளுக்கு சரியான முறையில் வருவதில்லை.. இயக்குனர்களை மதிப்பதில்லை என பேச்சு பரவ ஆரம்பித்தது. விசாரித்ததில் அதுதான் உண்மை என்றும் சொல்லப்பட்டது.. இதனால் நடித்த படங்கள் பாதியில் நின்றன. ஒருவழியாக முடிந்த படங்கள் ரிலீசுக்கு வர திக்கி திணறின. வந்த படங்களோ வந்த சூட்டில் பெட்டிக்குள் போயின.

சொந்தப்படம் எடுக்கலாம் என்று இறங்கி அதிலும் சொதப்பியதால், இதோ ‘இது நம்ம ஆளு’ படம் அம்போவென நிற்கிறது. அந்தப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் அடுத்து ஒரு படத்தை இயக்கி ரிலீசுக்கு தயாராக வைத்துவிட்டு, தொடர்ந்து விஷாலை வைத்து இன்னொரு படத்தையும் பாதி இயக்கி முடித்துவிட்டார்… (இப்போது புரிகிறதா விஷால் மீது பிரஸ்மீட்டில் சிம்பு ஏன் காட்டமாக பேசினார் என்று).

கௌதம் மேனன் டைரக்சனில் ஒரு படத்தை ஆரம்பித்து அதுவும் இன்னும் பாதியிலேயே நிற்கிறது.. என் பட கதாநாயகன் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கே வருவதில்லை என கௌதம் மேனன் பொதுமேடையில் புலம்பும் அளவுக்கு நிலைமை மோசமானது.

இந்தநிலையில் தான் செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ படம் ஆரம்பமானது. அப்போதே இந்த காம்பினேஷனை பலர் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். செல்வராகவனின் மனைவியும் இன்னொரு நிறுவனமும் சேர்ந்துதான் இந்தப்படத்தை தயாரிக்க ஆரம்பித்தனர்.

கையில் இருந்த பணத்தையெல்லாம் போட்டு கால்வாசி படத்தை எடுத்து முடித்த நிலையில், படத்தை தயாரிக்க பணம் தேவைப்பட்டது. ஆனால் சிம்பு படம் என்பதால் படமே ரிலீசாகுமா என்கிற சந்தேகத்தில் ஒருவர் கூட பைனான்ஸ் பண்ண முன்வரவில்லை.

இதனால் தற்போது இந்தப்படத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளிவைப்பதாக செல்வராகவன் அறிவித்துவிட்டார். அதுமட்டுமல்ல, அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்க இருக்கிறாராம். ஆக பாண்டிராஜ், கௌதம் மேனன், செல்வராகவன் ஆகியோருக்கெல்லாம் வேறு படம் கிடைக்கும், வேறு நடிகர்கள் கிடைப்பார்கள்..

ஆனால் சிம்புவின் சினிமா எதிர்காலம் இனி என்ன ஆகும் என்பது மட்டும் விடைதெரியாத வினாவாக, ஒரு கேள்விக்குறியாகவே ஆகியுள்ளது. இதில் கௌதம் மேனன் படம் அதிர்ஷ்டவசமாக முடிந்து, ரிலீஸாகி, ஒருவேளை அந்தப்படம் ஓடினால் தான் சிம்புவால் சினிமாவில் காலம் தள்ள முடியும். இல்லையென்றால் மீண்டும் அவர் இமயமலைப்பக்கம் கிளம்பு வேண்டியதுதான் என்கிறார்கள் சினிமா அனுபஸ்தர்கள்.

இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்க்கும்போது இன்னும் சில வருடங்கள் கழித்து, ‘முன்பு சிம்பு என ஒரு நடிகர் இருந்தாரல்லவா’ என்று சொல்லும் நிலை உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..