“பதவியை ராஜினமா பண்ணிட்டு வந்து பேசணும்” – டி.சிவாவுக்கு சிங்காரவேலன் எச்சரிக்கை..!

லிங்கா பிரச்னை தொடர்பாக ஆரம்பம் முதலே பேசி வரும் விநியோகஸ்தர் சிங்காரவேலன், “எங்களுக்கு ரஜினியை தான் தெரியும். வேந்தர் மூவீஸையோ, ஈராக்கையோ, ராக்லைன் நிறுவனத்தையோ தெரியாது. அதனால் தான் ரஜினியைக் கேட்கிறோம்” என்றே சொல்லிக் கொண்டு வந்தார். ‘லிங்கா’ படம் தோல்வியடைந்தது என்று கூறி பல போராட்டங்கள் நடத்திய இவர், லிங்கா விவகாரத்தில் தொடர்ந்து எண்ணெய் ஊற்றி பிரச்சனையை கரன்ட்டில் வைத்து வந்தார்.

ஒரு வழியாக இந்த விவகாரத்தில் கலைப்புலி தாணு தலையிட்டு, தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி, இறுதியாக ரூ.10 கோடி வழங்க சம்மதம் தெரிவித்தார் ராக்லைன் வெங்கடேஷ். இதை வினியோகஸ்தர்களும் ஏற்றுக்கொண்டதால், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்த லிங்கா பட பிரச்சினை முடிவடைந்தது. இப்படி இந்த செய்தியை முடிக்கலாம் என்று பார்த்தால் புதிதாக பங்கு பிரிக்கும் பிரச்சனை தலைதூக்கியுள்ளதே..

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை கன்னடர், இரக்கமற்றவர் என்றெல்லாம் லிங்கா விவகாரம் தீவிரமாக இருந்தபோது, ஏசிய இவர் தான் இன்று, “வில்லுக்கு விஜயன் என்றால் விருந்தோம்பலுக்கு ராக்லைன் வெங்கடேஷ்” என ஜால்ரா தட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இரண்டு நாட்களாக பலமணி நேரங்கள் நடந்த பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நடந்து கொண்ட விதமும், எங்களை உபசரித்த விதமும் கண்களை குளமாக்கிவிட்டன. வில்லுக்கு விஜயன் என்றால் விருந்தோம்பலுக்கு ராக்லைன் வெங்கடேஷ் என்று இலக்கியங்களை திருத்தியாக வேண்டும். அவரைப் போய் கன்னடர் என்று பிரித்து பேசிவிட்டோமே என்று மனம் கூனிக் குறுகிறது” என தோசையை திருப்பி போட்டுள்ளார். சரி.. இரட்டை நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் தானே..!

ஆனால் இப்போது பணம் பங்குபிரிக்கும் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் மற்றும் வேந்தர் மூவிஸ் நிர்வாகியாக உள்ள டி.சிவாவின் மீது பாய்ந்திருப்பதுதான் ஆச்சர்யம் அளிக்கிறது. அதே அறிக்கையிலேயே, “திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய வேந்தர் மூவிஸ் நிறுவனம் 10 கோடி ரூபாயில் பங்கு கேட்பது, “பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதையும் புடுங்குச்சாம் அனுமாரு” என்பதை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது. ஆட்டோவில் வந்திறங்கி இழப்பீடு பெறும் விநியோகஸ்தர்களிடம் ஆடி காரில் வந்து பங்கு கேட்பது தர்மமா என்பதை வேந்தர் மூவிஸ் தெளிவுபடுத்த வேண்டும். இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் நடுநிலையோடு பேசாமல் வேந்தர் மூவிஸ் நிர்வாகி என்ற முறையில் பேசும் சிவாவின் போக்கு சரியானது அல்ல” என்றும் சிவாவை கிண்டலடித்துள்ளார் சிங்காரவேலன்.

மேலும் “மார்ச் 23 திங்கட்கிழமை அன்று நடைபெற இருக்கின்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சிவா, வேந்தர் மூவிஸ் நிர்வாகியாக கலந்து கொண்டால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கலந்து கொள்ள வேண்டும். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளராக கலந்து கொண்டால் வேந்தர் மூவிஸ் பற்றி வாய் திறக்க கூடாது என்பதை எச்சரிக்கை கலந்த வேண்டுகோளாக வைக்கிறேன். அதையும் மீறி கலந்து கொண்டால் அதை பேச்சுவார்த்தையில் ‘லிங்கா’ திரைப்பட விநியோகஸ்தர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என இப்படி போகிறது அறிக்கை..

இனி பணத்தை பங்குபிரிக்கும் விவகாரத்தை ஒட்டி இரண்டு மாதங்களுக்கு மேல் இந்த பிரச்சனை ஓடும் போல தெரிகிறதே.. மழை விட்டாலும் தூவானம் விடாது என்று சும்மாவா சொன்னார்கள். ரஜினி முன்பு ‘அருணாச்சலம்’ படத்தை தயாரித்தது போல, மீண்டும் திரைத்துறையில் நலிந்தவர்களையும் வறுமையில் வாடும் நண்பர்கள் சிலரையும் கைதூக்கிவிடும்படியாக தனது அடுத்த படத்தை தயாரித்து உதவிசெய்தால் தான் அவர் மீதான இந்த கறை நீங்கும் என்பது உறுதி.