83 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜீவா


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜீவா.

கடந்த 1983-ம் வருடம் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று சாதித்தது. இதை மையமாக வைத்து பாலிவுட்டில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. பிரபல இயக்குநர் கபீர்கான் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் கபில்தேவ் ஆக பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார் ஜீவா. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த் வேடத்தில் இருக்கும் ஜீவாவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட்டில் முதல் முதலாக கால்பதிக்கும் நடிகர் ஜீவாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளிவந்து மிகப்பெரும் அளவில் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை வென்றதை மையமாக வைத்து உருவாகும் 83 திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.