நடிகர் சூர்யாவுடன் முதன் முறையாக இணையும் இயக்குநர் வெற்றிமாறன்


தமிழ்த்திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு 100 கோடிக்கும் மேல் வசூலாகி சூப்பர் ஹிட்டானது.

இதற்கு அடுத்ததாக விஜய்யை வைத்து வெற்றிமாறன் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் உலா வந்தது. இந்நிலையில் சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. இது சூர்யாவின் 40வது திரைப்படமாகும். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ள இத்திரைப்படத்தின் மூலம் சூர்யாவும், வெற்றிமாறனும் முதன்முறையாக இணைய உள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு இதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

‘’அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் சூர்யாவின் 40வது படத்தை எனது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதில் மகிழ்ச்சி’’
என தெரிவித்துள்ளார்.