மக்களிடம் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை பற்றி பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்” தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.

முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும்.

பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க அவருடன் கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையே பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கே.செல்வா எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சான்டி நடனம் அமைக்க, சண்டைப்பயிற்சியை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். நிர்வாகத் தயாரிப்பு லிஜீஷ்.

படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், வெளியீட்டிற்கு வேகமாகத் தயாராகி வருகிறது, “பரியேறும் பெருமாள்”.