தேவி +2 ; விமர்சனம்


தேவி முதல் பாகத்தில் தமன்னாவின் மேல் ரூபி என்கிற பேய் புகுந்து அவர் மூலமாக தனது ஹீரோயினாகும் ஆசையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் மூலம் ரூபியை தனது மனைவி தமன்னாவின் உடலிலிருந்து வெளியேற்றுகிறார் கணவர் பிரபுதேவா. தன் மீது புகுந்ததையும் தான் ஒரு பிரபல ஹீரோயினாக வலம் வந்ததையும் தமன்னா அறியவில்லை.. இதுதான் முதல் பாகம்

இந்த இரண்டாம் பாகத்தில் தமன்னா வீட்டை விட்டு வெளியே சென்றால் அவரை எல்லோரும் ஒரு நடிகையாக பார்த்து, இந்த உண்மை தமன்னாவுக்கு தெரிய வந்தால் சிக்கலாகி விடும் என நினைக்கிறார் பிரபுதேவா. அதனால் ஜோதிடரின் ஆலோசனைப்படி பேய்களே நுழைய முடியாது என சொல்லப்படும் மொரிசீயஸ் தீவுக்கு வேலையை மாற்றல் வாங்கிக்கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

ஆனால் இந்தமுறை மொரிசியஸ் தீவிற்கும் பேய், இல்லையில்லை இரண்டு பேய்கள் தேடி வருகின்றன. அப்படி வந்தது ரூபி பேய் அல்ல.. ரூபியால் சிபாரிசு செய்து அனுப்பப்பட்ட அவரது இரண்டு ஆண் நண்பர்களின் பேய்கள் தான்.. அதேபோல தேடி வந்தது தமன்னாவை அல்ல.. அவரது கணவர் பிரபுதேவாவைத்தான்.. இந்த இரண்டு பேய்களும் ஒரே நேரத்தில் பிரபுதேவாவை பிடித்துக்கொள்ள, ஒருவழியாக அவை எதற்காக இங்கே வந்தன என்பதை அறிந்து கொள்கிறார் தமன்னா.

தங்களது காதலிகளிடம் தங்களது காதலை சொல்வதற்கு முன்பாகவே தாங்கள் விபத்தில் இறந்து விட்டதாகவும் தங்களது காதலிகள் தங்களிடம் ஐ லவ் யூ சொன்னால் மட்டுமே தாங்கள் பிரபுதேவாவின் உடலை விட்டு விலகுவோம் என்றும் பேய்கள் மல்லுக்கட்டுகின்றன.

இதையடுத்து பேய்களுடன் ஒப்பந்தம் செய்யும் தமன்னா கூடவே கோவை சரளாவின் உதவியுடன், விரைவாக அந்த பேய்களின் காதலிகளை கண்டுபிடித்து அவர்களிடம் ஐ லவ் யூ சொல்ல வைக்க முயற்சி எடுக்கிறார். இதன் முடிவு என்ன ஆனது என்பதும் இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்களும் தான் மீதி படம்.

பேய் படம் என்றாலே நிமிடத்திற்கு நிமிடம் அச்சுறுத்தும் பின்னணி இசை, ஆவி புகை போல உருவம் என பயமுறுத்தும் படங்களுக்கு மத்தியில் மிக அழகாக இயல்பான நகைச்சுவையான முறையில் எந்த பயமுமின்றி பேய் படங்களை ரசிக்கலாம் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியதற்காக இயக்குனர் விஜய்க்கு நம் பாராட்டுகளை தெரிவித்து விடலாம்.

மேலும் இதுநாள் வரை ஒரு உடம்பில் ஒரு பே மட்டுமே புகுந்து ஆட்டி வைத்துக் கொண்டிருந்த கதைகளை தாண்டி, ஒரே உடம்பில் இரண்டு பேய்களை புகுத்தி, ஷிப்ட் முறையில் அவற்றுக்கு நேரமும் ஒதுக்கி புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார் இயக்குனர் விஜய்.

பிரபுதேவாவிற்கு இதில் மூன்று விதமான மேனரிசங்கள் மூன்றையுமே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் தமன்னாவின் கணவராக இயல்பான மனிதராக வரும் பிரபுதேவா நம்மை ரொம்பவே ஈர்க்கிறார்.

முதல் பாகத்தில் பேயாக மாறி மிரட்டிய தமன்னா, இதில் தனது கணவரை பேய்களிடம் இருந்து மீட்க நடத்தும் காமெடி போராட்டம் ரொம்ப கலகலப்பாகவே இருக்கிறது. அதை உணர்ந்து மிகுந்த நகைச்சுவை உணர்வையும் அதேசமயம் பரிதவிப்பையும் சரிசம விகிதத்தில் கலந்து வெளிப்படுத்தி இருக்கிறார் தமன்னா.

கோவை சரளாவின் ஓவர் சவுண்ட் கொஞ்சம் எரிச்சலூட்டினாலும் போகப்போக காட்சிகளுடன் அவரும் ஒன்றி விடுவதால் பெரிய அளவில் நமக்கு இடைஞ்சல் தராமல் பார்த்துக் கொள்கிறார்.

என்னடா ஆர்ஜே பாலாஜியை காணவே இல்லை என நினைக்கும் நேரத்தில் கிளைமாக்ஸுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு என்ட்ரி கொடுத்து புதுவிதமான பிரச்சினைகளை கிளப்பி அதகளம் பண்ணுகிறார் மனிதர்.. கொஞ்ச நேரமே வந்தாலும் செம கலாட்டா பண்ணி விடுகிறார்.

இந்த படத்தில் இன்னும் இரண்டு கதாநாயகிகளான நந்திதா மற்றும் டிம்பிள் ஹயாத்தி இருவருமே தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர் இடைச்செருகலாக வரும் அஜ்மலின் வில்லத்தனம் எதிர்பாராதது.

சாம் சி.எஸ்-இன் பின்னணி இசை பேய் வரும் காட்சிகளை கண்டு அலற வைக்காமல், கைதட்டி குதிக்க வைக்கின்றது. மொரீஷியஸ் தீவின் அழகை சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளுக்கு விருந்தாக்கும் கண்ணோட்டத்துடன் அள்ளிக் கொண்டு வந்துள்ளது அயனன்கா போஸின் ஒளிப்பதிவு.

முதல் பாதியில் அப்படி இப்படி என கதையை நகர்த்தினாலும் இடைவேளைக்கு முன்பு தமன்னாவும் பிரபுதேவாவும் பிளைட்டில் ஏறி அமரும் காட்சியிலிருந்து படத்தை டேக் ஆப் செய்கிறார் இயக்குனர் விஜய். அதிலிருந்து கிளைமாக்ஸ் வரை நான் ஸ்டாப் ஓட்டம்தான்.

குறிப்பாக ஏர்போர்ட்டை சுற்றி சுற்றி வருவது, அறைக்குள் நுழைய கதவை திறந்து வாசலில் விழுவது என குழந்தைகள் ரசித்து சிரிக்கும் காட்சிகள் ஏராளம். திரைக்கதையில் எதிர்பாராத பிரச்சினைகளை அழகாக உள்ளே நுழைத்து அவற்றிற்கு லாஜிக் மீறாமல் அருமையான தீர்வுகளையும் கொடுத்து கடைசியில் சுபம் போடுகிறார் விஜய்.

இந்த சம்மர் கொண்டாட்டமாக வெளியாகியிருக்கும் தேவி+2, குழந்தைகள் பெரியவர்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் கவரும் படம் என்பதில் சந்தேகமே இல்லை