NGK – விமர்சனம்


இளைஞர்கள் அதிலும் விவசாயிகள் அரசியலுக்குள் நுழைவது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதையும் அப்படியே நுழைந்தாலும் அதிகாரத்தை கைப்பற்றி நல்லது செய்ய எவளவு போராட வேண்டும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் இந்த என்ஜிகே.

நல்ல படிப்பு படித்துவிட்டு கைநிறைய சம்பளம் தரும் வேலையை உதறிவிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணியில் இறங்குகிறார் நந்த கோபாலன் குமரன் என்கிற சூர்யா. அவரை பார்த்து இளைஞர்கள் பலரும் இப்படி களமிறங்க, இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் பலரிடமிருந்தும் சூர்யாவுக்கு அச்சுறுத்தல் வருகிறது.

இதை தட்டிக்கேட்க முடியாமல் தடுமாறும் அதேசமயம் சாதாரண ஒரு கவுன்சிலருக்கு இருக்கும் அதிகாரத்தை கண்டு பிரமிக்கும் சூர்யாவை அரசியலில் இறங்கும்படி வற்புறுத்தி களமிறக்குகிறார் பொன்வண்ணன் கட்சியைச் சேர்ந்த பாலா சிங்.

எதிர்க்கட்சி எம்எல்ஏ இளவரசுவிடம் உதவியாளராக சேர்ந்து தன்னுடைய புத்திசாலித்தனமான முயற்சியால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டின் கவனத்துக்குமே ஆளாகிறார் சூர்யா. உட்கட்சி புகைச்சல், ஆளுங்கட்சி எரிச்சல் இவற்றை தாண்டி சூர்யாவால் என்ன செய்ய முடிந்தது, தான் அரசியலுக்கு வந்ததன் நோக்கத்தை சாதிக்க முடிந்ததா என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது

சூர்யா ஏற்கனவே அரசியல் சார்ந்து ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் படம் என்பதாலேயே இந்த சமயத்தில் நம்மை கவனிக்க வைக்கிறது இந்தப்படம். அரசியலுக்கு இளைஞர்கள் வராமல் ஒதுங்கிப் போவதன் காரணத்தையும் வந்தால் என்ன விளைவுகள் நடக்கும் என்பதையும் சூர்யாவின் கதாபாத்திரம் மூலம் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது

அந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா அற்புதமாக உயிர் கொடுத்துள்ளார். பணிவு, நக்கல், நையாண்டி, கோபம், ஆக்சன் என கலவையான முகபாவங்களை நேரத்திற்கு ஏற்றாற்போல் வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க வைக்கிறார் சூர்யா. சிறிது காலம் தாழ்த்தி வந்தாலும் சூர்யாவுக்கு இது ஒரு தரமான சம்பவம்.

கதாநாயகிகளாக சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவியும் அரசியல்வாதிகளின் வெற்றி தோல்விகளுக்கு பின்னணியாக இயங்கும் சோசியல் மீடியா தொழில்நுட்பக் குழு அதிகாரியாக ரகுல் பிரீத் சிங்கும் நடித்துள்ளனர். சாய் பல்லவி நடிப்பு நிறைய இடங்களில் ஓவர் ஆக்ட் ஆகவே வெளிப்பட்டுள்ளது.. குறிப்பாக சூர்யாவின் மேல் வீசும் சென்ட் வாசனைக்கு அவர் கொடுக்கும் விளக்கம்.. அதேபோல மருத்துவமனையில் ரகுல் பிரீத் சிங்கிடம் அவர் பேசும் வசனம்.. இது இரண்டுமே அவரது ஓவர் ஆக்டிங்கிற்கான சாம்பிள்கள்.

ரகுல் பிரீத் சிங் ரகுல் தனது கதாபாத்திரத்திற்கான கெத்தை ஆரம்பத்தில் காட்டினாலும் போகப்போக சாய் பல்லவியிடம் சக்களத்தி சண்டை போடும் சராசரி பெண்ணாக மாறி விடுகிறார். ஆனாலும் நடிப்பு ஓக்கே

முதலமைச்சராக நீண்ட நாளைக்கு பிறகு கன்னட நடிகர் தேவராஜ் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.. பொன்வண்ணன் வழக்கம்போல ஆர்ப்பட்டமில்லா நடிப்பு. எம்எல்ஏவாக வரும் இளவரசனின் தெனாவட்டு ரசிக்க வைக்கிறது. ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி கட்சியில் பல காலமாக இருந்தாலும் முன்னேற முடியாமல் காலத்தை ஓட்டும் ஒரு சராசரி கட்சிக்காரனின் முகமாக தன்னை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் பாலாசிங். அவரது கெட்டப்பும் வசன உச்சரிப்பும் சபாஷ் சொல்ல வைக்கின்றன. சூர்யாவின் நண்பராக வரும் ராஜ்குமார் பொருத்தமான கதாபாத்திரத்தை மிகச்சரியாக செய்து பரிதாபம் அள்ளுகிறார்.

சூர்யாவின் பெற்றோராக உமா பத்மநாபன், நிழல்கள் ரவி மற்றும் தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி என இன்ன பிர கதாபாத்திரங்களும் எதார்த்த மாந்தர்களாக நடமாடுகின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஒருபக்கம் ரசிக்க வைக்கிறது என்றால் பின்னணி இசையும் கதையோட்டத்துடன் சேர்ந்து இயல்பாக நம்மையும் நகர்த்துகிறது. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் பிரவீணின் படத்தொகுப்பும் கதைக்கு நியாயமான பங்களிப்பை செய்துள்ளன.

போராடும் குணம் கொண்ட இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி சொன்னதற்காகவே இயக்குனர் செல்வராகவனை முதலில் பாராட்டி விடுவோம். அதேசமயம் அரசியலில் நுழைந்தபின் கவனம் பிசகினால், வந்த வேலையை மறந்தால் என்ன நடக்கும் என்பதையும் புட்டு புட்டு வைத்துள்ளார். குறிப்பாக பாலாசிங்கிடம் தன்னை அண்ணன் என்று சூர்யா அழைக்கும்படி சொல்லும் காட்சி ஒரு நல்ல மனிதனை அரசியல் எப்படி மாற்றிவிடும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.

வழக்கமாக செல்வராகவனின் படங்களில் இல்லாத மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இதில் பிரமிக்க வைக்கின்றன. படம் தாமதாக வெளியானதாலோ என்னவோ சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு படத்தின் சாயல்களும் சில காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது படத்திற்கு பலவீனமே..

மொத்தத்தில் ஜாலியாக குடும்பத்துடன் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்துள்ளனர் சூர்யா-செல்வா கூட்டணி.