கள்ளப்படம் – விமர்சனம்

இயக்குநர் வடிவேல், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின். இந்த நால்வரும் எப்படியாவது சினிமாவில் கூட்டாக ஒரு படம் பண்ணிவிடவேண்டும் என துடிக்கின்றனர். வடிவேல் சொன்ன யதார்த்த கிராமத்து கதை பல தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட, கோபம் கொண்ட இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா.?

கமர்ஷியல் படம் இயக்கவெல்லாம் கிளம்பிவிடவில்லை.. தனது ஆதர்ஷ கதையை படமாக்க, தானே படத்தை தயாரிக்க தீர்மானித்து அதற்கான பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். நண்பர்களுக்கு சின்னதாக ஒரு திருட்டு நடத்தி சாம்பிள் காட்டுகிறார்.

உடனே நண்பர்கள் நம்பிக்கையாக, ஒரு படம் எடுப்பது போல பிரமாதமாக ஸ்கெட்ச் எல்லாம் போட்டு, தனது கதையை அலட்சியமாக பேசிய ஆடுகளம் நரேன் வீட்டிலேயே, அவர் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணத்தை இந்த நால்வர் அணி கொள்ளையடிக்கிறது.

இவர்கள் முயற்சி செய்த அதே நேரத்தில், இன்னொரு பக்கம் நரேனின் ‘கீப்’பான லட்சுமி பிரியா தனது காதலனுடன் சேர்ந்து அதே பணத்தை அதே நாளில் கொள்ளையடிக்க முயற்சி செய்கிறார்கள். இதில் நால்வர் அணி கொள்ளையடிப்பதில் முந்திக்கொள்ள, லட்சுமிப்ரியாவின் காதலனும் ஆட்களும் மாட்டிக்கொள்கிறார்கள்.

ஒருபக்கம் நரேனின் நபரான போலீஸ் அதிகாரி கவிதாபாரதி சைலண்டாக விசாரிக்க, இன்னொருபக்கம் திருடிய பணத்தை வைத்து தங்களது நண்பரான சிங்கம்புலியை தயாரிப்பாளராக்கி விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்துகின்றனர். இந்த நிலையில் திருடப்போன இடத்தில் காகின் வைத்திருந்த பென் ட்ரைவ் மிஸ்சானது தெரிய வருகிறது. திட்டமிட்டபடி படத்தை எடுத்தார்களா.? இல்லை பிடிபட்டார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஆடுகளம் நரேன், லட்சுமிப்ரியா, கவிதாபாரதி, சிங்கம்புலி உட்பட படத்தில் நடித்தவர்கள் நடிப்பில் குறைவைக்கவில்லை என ஒரே வரியில் சொல்லிவிட்டு, நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடைதேட முயற்சிக்கலாமா..?

      தான் பார்த்து பார்த்து செதுக்கிய கிராமத்து கூத்து பற்றிய கதையை உயர்வென்று நினைப்பது வடிவேலின் உரிமை. ஆனால் அதை மறுத்துவிட்டார்கள் என்பதற்காக, பதிலுக்கு ஒரு கமர்ஷியல் கதை எடுப்பதை கேவலமாக நினைத்து, அதைவிட ‘புனிதமான’ திருட்டுத்தொழிலில் இறங்கி அந்த காசை வைத்து படம் எடுக்க முயற்சிப்பது என்னவிதமான லாஜிக்கோ..?
      திருடப்போன இடத்தில் மிஸ்ஸான பென் ட்ரைவ், எப்போதுமே எடிட்டர் காகின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாதனம்.. ஆனால் அது காணாமல் போனதை திருட்டு நடத்தி, படப்பிடிப்பையும் ஆரம்பித்த 17வது நாளில் தான் கண்டுபிடிக்கிறாராம். குழிக்கும்போதோ, படப்பிடிப்பிற்கா உபயோகப்படுத்தவோ அது ஞாபகத்திற்கே வரவில்லையா..? அந்த அளவுக்கா ஒருத்தன் கேர்லஸ் ஆக இருப்பான்..?
      அதைவிட முட்டாள்தனம் அந்த பென் ட்ரைவை திருடிய இடத்தில் இருந்து எடுக்க பட்டப்பகலிலேயே, அதுவும் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் பைக்கிலேயா வருவார்கள்..? திருடுவதற்கு பல நாட்கள் திட்டம் போட்ட அந்த புத்திசாலிகள், அத்தனை நாளாக அந்த பென் ட்ரைவ் அங்கேயே கிடக்கும் என நம்புவது எவ்வளவு முட்டாள்தனம்.? அதிலும் அவர்களை துரத்தி வரும் போலீஸ்காரர்கள் பைக்கின் அருகில்போது, நம்பரைகூட பார்க்காமல் விடுவார்களா.?
      இன்னொருபக்கம் காணாமல் போன அந்த பென் ட்ரைவ் நரேன் வீட்டு வேலைக்காரி வீடு கூட்டும்போது அவள் காலில் தட்டுப்படுகிறது. ஒரு வேலைக்காரி என்பவள் அதை அவள் எடுத்து யாரிடமாவது கொடுபால்.?. இல்லை கூட்டி குப்பையில் தள்ளி இருப்பாள். இல்லை தனக்கு வேண்டுமென்று லவட்டிக்கொண்டாவது போயிருப்பாள். ஆனால் கிட்டத்தட்ட 17 நாட்களாக அது யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது இயக்குனர் வடிவேல் திரைக்கதையில் தனக்கு வசதியாக வைத்துக்கொண்ட மட்டமான லாஜிக் தானே..?
      படம் எடுக்கவேண்டும் என நேர்மையாக போராடும் ஒரு உதவி இயக்குனர், கொள்ளையடித்து படம் எடுக்கலாம் என்கிற புதிய உத்தியை காட்டுகிறதா இந்தப்படம்..?
      அப்படி கொள்ளையடித்த பணத்தை வட்டியும் முதலுமாக எடுத்தவருக்கே அவர் அறியாமல் திருப்பி கொடுத்துவிட்டால் சரியாப்போச்சா..? திருடியது கருப்பு பணம் தான் என்றாலும் திருடிய குற்றத்திற்கான தார்மீக தண்டனை எதுவும் திருடியவர்களுக்கு கிடையாதா..?

இப்படி இன்னும் பல ஓட்டைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ஓட்டைகளை எல்லாம், சிமெண்ட் வைத்து பூசாமல், சும்மா துணியை வைத்து சுருட்டி அடைத்து, சினிமா எடுக்கும் புதிய உத்தியை காட்டி உதவி இயக்குனர்களை கொள்ளையர்களாக சித்தரித்துள்ள வடிவேல், தனது அடுத்த படத்தில் கதை கிடைக்காத தயாரிப்பாளர் ஒருவர் இயக்குனரின் கதையை திருடி வேறு ஆளை வைத்து படம் இயக்கி, அதில் வருமானம் வந்தபின், இயக்குனரின் கதைக்கான பணத்தை திருப்பித்த்ருவதாக ஒரு சூப்பர் படத்தை இயக்க இப்போதே ஒரு பொக்கே கொடுத்து வைப்போமே..