கொடிவீரன் – விமர்சனம்


பெற்றோரை சிறுவயதிலே இழந்துவிட்டு தங்கை சனுஷாவை பாசமாக வளர்த்து வரும் சசிகுமார். அண்ணன் விதார்த்துக்கு நல்ல பெண்ணாக அமையவேண்டுமே என கோயில் கோயிலாக வேண்டுதல் வைக்கும் மஹிமா. தங்கை பூர்ணாவின் கணவன் கெட்டவன் தான் என்றாலும் தங்கைக்காகவும் அவளது கணவனுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்ய துணியும் பாசக்கார அண்ணன் பசுபதி..

இப்படி ஒன்றுக்கு மூன்றாக அண்ணன்கள்-தங்கைகள் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த கொடிவீரன்’.. விதார்த்தின் தங்கை மஹிமாவை காதலிக்கும் சசிகுமார், தனது தங்கை சனுஷாவுக்கு விதார்த்தை திருமணம் முடிக்கிறார். தனது தங்கை பூர்ணாவின் கணவன் இந்தர்குமாரை ஜெயிலுக்கு அனுப்ப துடிக்கும் அதிகாரி விதார்த்தை போட்டுத்தள்ள துடிக்கிறார் பசுபதி. பசுபதியிடம் இருந்து விதார்த்தை சசிகுமாரால் காப்பாற்ற முடிந்ததா என்பது மீதிக்கதை.

கொடிவீரனாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கிராமத்தான் என்கிற ரெடிமேட் சட்டையில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சசிக்குமார். தங்கை கணவனின் உயிரை காக்க, இடைவேளையில் அவர் நடத்தும் அதிரடி ஆபரேசன் உண்மையிலேயே செம ட்விஸ்ட் தான். கேரக்டருக்கு தகுந்த ஆளாக தன்னை மாற்றிக்கொண்டு இருக்கும் விதார்த், எந்த ஹீரோயிசமும் இல்லாமல் எளிய மனிதராக நம்மை கவர்கிறார்..

ஒன்றுக்கு மூன்று கதாநாயகிகளாக பூர்ணா, மஹிமா, சனுஷா. இதில் பளீர் சிரிப்பாலும் கொஞ்சல் பேச்சாலும் மஹிமாவும் சனுஷாவும் படம் முழுதும் நம்மை கட்டிப்போட்ட, ஆக்ரோஷமான நெகடிவ் கேரக்டரில் நம்மை அதிரவைக்கிறார் பூர்ணா. அதிலும் அவர் மொட்டையடித்துக்கொள்ளும் காட்சி.. சான்சே இல்லை.

தங்கைக்காகவும் தங்கையின் கணவருக்காகவும் அநியாயத்தின் பக்கம் நிற்கும் பசுபதி கேரக்டர் பெர்பெக்ட் மேட்ச்.. பூர்ணாவின் கணவராக அறிமுகமாகியிருக்கும் இந்தர்குமார் (அருண்விஜய்யின் மச்சான்) தமிழ்சினிமாவில் நல்லதொரு வில்லனாக வலம்வருவார். படத்தின் கலகலப்பை தக்கவைப்பதில் பாலசரவணன் மீட்டர் மாறாமல் கவனம் செலுத்தி இருக்கிறார்.. கூடவே சசிகுமாரின் தாய்மாமனாக வருபவரும் தன் பங்கிற்கு சலசலக்க வைக்கிறார். விதார்த்தின் தம்பியாக வரும் விக்ரம் சுகுமாறனும் முரட்டு தோற்றத்துடன் டெரர் ஏற்றுகிறார்.

முத்தையாவின் முந்தைய படங்களில் நாம் தொடர்ந்து பார்த்துவரும் கிராமத்து மனிதர்களின் கோபம், பாசம், ஆத்திரம், வன்மம் கலந்த கதைதான் இதுவும்.. ஆனால் இந்தப்படம் ஏனோ உணர்வு ரீதியாக நம்மை கட்டிப்போடவே செய்கிறது.. ஒன்றுக்கு மூன்றாக அண்ணன்-தங்கைகள் பாசத்தை மையப்படுத்தியே அவர் தனது திரைக்கதையை சுழல விட்டுள்ளதுதான் இந்தப்படத்தின் பலம்.

கொடிவீரன் – பி & சி ஏரியாவில் கொடி நாட்டுவான்