பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்ட பின்னணி தெரியுமா.?

சின்ன பட்ஜெட் படங்களோ அல்லது மெகா பட்ஜெட் படங்களோ எதுவாக இருந்தாலும் தங்களது படத்துக்கு வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்காக அழகு தமிழில் பெயர் வைத்து, ‘U’ சான்றிதழ் வாங்கும்படி படம் எடுத்து கவனமாக செயல்படுவார்கள். ஆனால் கமல் நடித்து கடந்தவாரம் வெளியான ‘பாபநாசம்’ படத்திற்கு இந்த அம்சங்கள் ஏதேச்சையாகவே அமைந்திருந்தும் கூட வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது..

அதற்கு காரணமாக சொல்லப்பட்டிருப்பதை கேட்டால் தான், நமக்கு காது வழியாக சிரிப்பு வருகிறது. அதாவது பாபநாசம் படம் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டுள்ளதாம். அதனால் இது வரிவிலக்கு அளிக்க உகந்த படம் அல்ல என கூறப்பட்டுள்ளது. ஆனால் காரணம் அது அல்ல என்பது பாமரனுக்கு கூட தெரியும்.

பெரும்பாலும் வரிவிலக்கு என்பது அரசாங்கத்தின் சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் தான் வழங்கப்படுகிறது என்று அரசல் புரசலாக சொல்லப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதை பார்க்கும்போது இது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகிறது.

அதேபோல கமலுக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான ‘விஸ்வரூப’ முட்டல் மோதல் உலகறிந்தது. அது ஒருபக்கம் இருக்க இந்தப்படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னொரு சேனலுக்கு கைமாறிவிட்டது.. தவிர ஆளும் அரசுக்கு பிடிக்காத அந்த சேனலைத்தான் படத்தில் தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

படத்தில் கமலே கூட ஒரு இக்கட்டான கட்டத்தில், தனது மச்சானை அழைத்து நான் சொல்லும்போது அந்த சேனலுக்கு தகவல் சொல்லி வரச்சொல்லிவிட்டு என சொல்வார். அதேபோல வந்து நிற்கும் அந்த சேனல், தற்போதைய அரசுக்கு ஆகாத சேனல்.. இதுபோதாதா..?

இத்தனை எதிர்மறை அம்சங்கள் இருந்தால் நல்ல படம் கூட தற்போதைய அரசாங்கத்தை பொறுத்தவரை பிற்போக்குத்தனமான படமாகத்தானே ஆகிவிடும்.. அதுதான் ‘பாபநாசம்’ படத்தின் வரிவிலக்கு விஷயத்திலும் நடந்துள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.