கூத்தன் – விமர்சனம்


அறிமுக நடிகர் ராஜ்குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.எல்.வெங்கி இயக்கியுள்ள படம் கூத்தன்.. நடனப்போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கிறதா..? பார்க்கலாம்.

ஏதோ ஒரு தயாரிப்பாளர் புண்ணியவான், ஒருகாலத்தில் தன் படத்துக்காக போட்ட செட்டை அப்படியே சினிமாக்காரர்களுக்கு என தங்குவதற்கு கொடுத்துவிட, அங்கே தங்கியிருப்பவர்களில் துணை நடிகையான ஊர்வசியின் மகன் ராஜ்குமார் நடனத்தில் ஆர்வம் காட்டுகிறார்.

நண்பர்களுடன் சேர்ந்து டான்ஸ் குரூப் ஒன்றை ஆரம்பித்து சின்னச்சின்ன போட்டிகளில் கலந்துகொள்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும் மிகப்பெரிய டான்சரான நாகேந்திர பிரசாத் நடத்தும் நடனப்பள்ளி டான்சர்களுக்குத்தான் பரிசு கிடைக்கிறது.

அதேசமயம் நாட்டியப்பள்ளி நடத்தும் கிரா-ஸ்ரீஜிதா சகோதரிகளின் நட்பு ராஜ்குமாருக்கு கிடைக்கிறது. கூடவே ஸ்ரீஜிதாவின் காதலும். அதுமட்டுமல்ல, இவர்களுக்கும் நாகேந்திர பிரசாத்துக்கும் ஒரு முன்பகை இருப்பதும் அதனால் இவர்களின் வீடு கடனில் மூழ்கி இருப்பதும் தெரிய வருகிறது.

இந்தநிலையில் தாங்கள் குடியிருக்கும் சினிமா காலனியின் முதலாளி நடத்திவரும் ட்ரஸ்ட்டுக்கு திடீரென ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதற்காக காலனி இடத்தை விற்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. தாங்களே அந்த தொகையை எப்படியாவது புரட்டி கொடுத்து விடுவதாக வாக்கு கொடுக்கிறார் ராஜ்குமார்.

அதேசமயம் மிகப்பெரிய டான்ஸ்போட்டி ஒன்று சிங்கப்பூரில் நடப்பதும் வென்றால் பரிசுத்தொகை 5 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் ராஜ்குமாருக்கு தெரிய வருகிறது. இவர்களின் பணப்பிரச்சனையை சமாளிப்பதற்காகவும் நாகேந்திர பிரசாத்தை வீழ்த்தி பாடம் புகட்டுவதற்காவும் இந்த போட்டியில் கலந்துகொள்கின்றனர்

ராஜ்குமார்-ஸ்ரீஜிதா அன் கோ. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் தடைகள் பல எதிர்ப்படுகின்றன. அதையெல்லாம் தாண்டி போட்டியில் வென்றார்களா என்பதுதான் மீதிக்கதை.

அறிமுக நடிகர் ராஜ்குமார் டைரக்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே அச்சுப்பிசகாமல் செய்திருக்கிறார். அதுவே பல இடங்களில் போரடிக்கிறது. அதேசமயம் நன்றாக நடனம் ஆடுகிறார். சிரிப்பு கொஞ்சும் முகம் என்பதால் சோகத்தை வெளிப்படுத்த ரொம்பவே சிரமப்படுகிறார். ஆனால் இன்னும் முறையான பயிற்சியும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்தால் தப்பிக்கலாம்.

ஸ்ரீஜிதா கோஷ், கிரா நாராயணன், சோனல் சிங் என மூன்று கதாநாயகிகள். ஸ்ரீஜிதா தான் ராஜ்குமாரின் ஜோடி என்றாலும் அவரது அக்காவாக வரும் கிரா ஏதோ ஒருவிதத்தில் நம்மை வசீகரிக்கிறார். ஸ்ரீஜிதா அடிக்கடி நாகேந்திர பிரசாத்துக்கு சவால் விட்டு தனது அழகு முகத்தில் வில்லித்தனம் காட்டுகிறார். நட்பாக பழகி ஒருதலை காதலால் சோகத்தில் மூழ்கும் கேரக்டரில் சோனல் சிங் செம பிட்.

நாகேந்திர பிரசாத் மெயின் வில்லனா என தோன்றினாலும் இந்தக்கதைக்கு அவர் பொருத்தமான ஆள் தான். ஊர்வசியின் கேரக்டர் நம்மை நெகிழ வைத்தாலும், அவரது காமெடிக்கு சிரிப்புதான் வருவேனா என்கிறது. நாயகனின் நண்பர்களாக நான்கைந்து பேர் வந்தாலும் காமெடி ஏரியா சற்று வீக் தான். பாக்யராஜ், ரேணுகா முருங்கைக்காய் சமாச்சாரம் என சில் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளதை தவிர்த்திருக்கலாம்.

இசையமைப்பாளர் பால்ஸ் இசையில் டி.ஆர்.குரலில் ‘கிங்கிசா மங்கிசா’ பாடலில் நம்மையே எழுந்து ஆடவைக்கும் அளவுக்கு உற்சாக துள்ளல்..

இயக்குனர் வெங்கி ரொம்பவே லைட்டான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதில் சிக்ஸர் தட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரது அமெச்சூர்த்தனமான திரைக்கதை மற்றும் படமாக்கல் மூலமாக சிங்கிள் ரன் எடுப்பதற்கே திணறியிருக்கிறார். நடன பிரியர்களுக்கு வேண்டுமானால் இந்தப்படம் ஒருவேளை உற்சாகம் தரலாம்..