சமீபத்தில் நடிகர் சிவகுமார், தன்னை இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது அவரது கைபேசியை தட்டிவிட்டார். இவரது செயல் சோஷியல் மீடியாவில் கடும் கண்டனத்துக்கு ஆளானது. இந்தநிலையில் சோஷியல் மீடியா செயல்பாடு குறித்தும் செல்பி மோகம் குறித்தும் ஒரு நாளிதழில் நடிகர் சூர்யா தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது
“சமூக ஊடகங்கள் ஒருவகையில் நம்மிடம் கும்பல் மனோபாவத்தை வளர்த்தெடுக்கின்றன. எங்கிருந்தும் எவர் மீதும் பாயக் காத்திருக்கும் குரூர மனோநிலைக்கு என்னுடைய தந்தையும் சமீபத்தில் இலக்கானார். ஒரு விழாவில் பங்கேற்கச் சென்றவரிடம் குறுக்கிட்டு, ‘தன்படம்’ எடுக்க முற்பட்டார் ஓர் இளைஞர். என் தந்தையார் அந்த இளைஞரின் செல்பேசியைத் தட்டிவிட்டார்.
அந்த சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவருடைய 75 ஆண்டு கால வாழ்வையே கேலிசெய்தது. ‘அந்த இளைஞரிடம் அவர் கனிவாக நடந்துகொண்டிருக்கலாம்’ என்பதே என் கருத்தும். அந்த நிகழ்வுக்குப் பின்னர் என் தந்தையின் கருத்தும் அதேதான். ஆனால், அந்த ஒரு நாளுக்குள் மட்டும் அவர் மீது எவ்வளவு தாக்குதல்கள்?
விமர்சனம்’ என்ற பெயரில் காழ்ப்புணர்வைக் கொட்டுவதும், வயதுக்கும் அனுபவத்துக்கும் எவ்விதமான மதிப்பையும் வழங்காமலிருப்பதுதான் எதிர்வினையா? பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது, தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல்.
இறப்பு நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தப் போகுமிடத்திலும், சிலர் ‘தன்படம்’ எடுக்க கட்டாயப்படுத்தும்போது அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறுவது எனக்கே தனிப்பட்ட அனுபவம்.
விமான நிலையத்தில் கழிப்பறையை உபயோகித்துவிட்டுத் திரும்பினால், அங்கும் கேமராவோடு நிற்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாத் தரப்பினருமே இத்தகைய அத்துமீறலைச் செய்வதும், இத்தகைய தர்மசங்கட சூழலைப் பிரபலங்கள் எதிர்கொள்வதும் எனது அன்றாட நிகழ்வுகள்” என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.
அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது..