அக்னி தேவி – விமர்சனம்


பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்து பலவித சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி இருக்கும் படம் தான் அக்னி தேவி. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவலை தழுவி இந்த படம் உருவாகியிருக்கிறது நாவலில் இருக்கும் அதே விறுவிறுப்பு படத்திலும் இருக்கிறதா..? பார்க்கலாம்.

போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா.. அவரது காதலி ரம்யா நம்பீசன்.. தொலைக்காட்சியில் பணிபுரிபவர்.. ரம்யாவின் தோழி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொன்றவர் இவர்தான் என சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஒருவரை குற்றவாளியாக்குகின்றனர். ஆனால் பாபி சிம்ஹாவிற்கு கிடைக்கும் தடயங்கள் அந்த இளைஞன் குற்றவாளி அல்ல என சொல்கின்றன, இதை நிரூபிக்க பாபி சிம்ஹா முயற்சி செய்வதற்குள் அந்த இளைஞரை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகின்றனர்.

அதேசமயம் இறந்து போன பெண் பத்திரிக்கையாளரிடமிருந்து ஆளும் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் மதுபாலாவின் அரசியல் வாழ்க்கையையே ஆட்டம் காண வைக்கக்கூடிய ஆதாரம் ஒன்று பாபி சிம்ஹாவிடம் சிக்குகிறது. அதை கைப்பற்ற அதிகாரத்தை பயன்படுத்தி மிகக் கொடூரமான முறையில் முயற்சிக்கிறார் மதுபாலா.. அது என்ன ஆதாரம்..? மதுபாலாவின் தாக்குதலுக்கு தப்பித்து அந்த ஆதாரத்தை பொதுமக்களிடம் வெளிப்படுத்தினாரா பாபி சிம்ஹா என்பது மீதி கதை.

இந்த படத்தில் தான் முழுவதுமாக நடிக்கவில்லை என்றும் தான் நடித்த சில காட்சிகளுடன் தன்னைப் போன்ற மார்பிங் செய்து இந்த படத்தை முடித்து விட்டார்கள் என்றும் சமீப நாட்களாக பாபி சிம்ஹா குற்றம்சாட்டி வரும் வேளையில், இந்த படத்தின் ஒரு சில காட்சிகளை பார்க்கும்போது அவர் சொல்வது உண்மை தான் என்று நன்றாகவே தெரிகிறது. குறிப்பாக பாபி சிம்ஹாவின் முகத்தில் கோணிப்பையை போட்டு மூடி சண்டையிடும் காட்சி, லாங் ஷாட்டில் படமாக்கப்பட்ட இன்னொரு சண்டைக் காட்சி ஆகியவற்றை கூறலாம்.

ஆனால் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோருடன் உள்ள மனக்கசப்புகளை மறந்து பாபி சிம்ஹா கூடுதல் ஒத்துழைப்பு தந்து இந்த படத்தில் நடித்திருந்தார் என்றால் அவருக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும். அந்த அளவுக்கு படம் விறுவிறுப்பாக நகர்கிறது.. இடையில் ஏற்பட்ட குழப்பங்களால் தான் திரைக்கதை மாற்றப்பட்டு எந்த வழியில் பயணிப்பது என்று தெரியாமல் தடுமாறி இருபது நன்றாகவே தெரிகிறது.

பாபி சிம்ஹாவுக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் ஓரளவு ஒத்துப்போனாலும் முழுமையாக இல்லை.. அதாவது கதை நன்றாக இருக்கிறது பாபிசிம்ஹா ஒத்துழைப்பு தந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கும்.

படத்தில் பாபி சிம்ஹாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வீல் சேரில் அமர்ந்தபடி அட்டகாசம் செய்து இருக்கிறார் நடிகை மதுபாலா. நீண்ட நாட்கள் கழித்து அவருக்கு ஒரு அதிரடியான ரீ என்ட்ரி.. இருந்தாலும் அவரது வசன உச்சரிப்புகளிலும் உடல் மொழியிலும் கொஞ்சம் செயற்கைத்தனம் இழையோடுவதை மாற்றி இருந்திருக்கலாம்.

நேர்மையான அரசியல்வாதியாக எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ வைக்கிறார் படத்தின் நாயகி தான் என்றாலும் வெகு சில காட்சிகளில் பெயருக்கு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு போகிறார் ரம்யா நம்பீசன். நாயகனின் நண்பனாக தனது காமெடிக்கு யாராவது சிரிக்க மாட்டார்களா என எதிர்பார்க்கும் சதீஷ் வழக்கம்போல.

படத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சுவாதி கொலை வழக்கு, அதற்கு காரணமாக சொல்லப்பட்ட மணிகண்டன் தற்கொலை என பரபரப்பு கிளப்பிய நிகழ்வுகளை ஒன்றுக்கொன்று முடிச்சிட்டு விறுவிறுப்பாக கதையை நகர்த்தியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா..