பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? அரசுக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்


நடிகர் விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியாக உள்ளது. பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் கே.பி. செல்வா என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் சுரேஷ்குமார் பிகில் கதைக்கு உரிமை கோரிய செல்வாவின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது என்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ எந்ந திரைப்படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது என்றும், அதிக விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என உறுதி அளித்தால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் சார்பில் பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.