அடுத்த சாட்டை – விமர்சனம்


சாட்டை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் அடுத்த சாட்டை திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையேயான உறவைச் சொல்கிறது.

தம்பி ராமையா கல்லூரி முதல்வர். சமுத்திரக்கனி அக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். அக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தருகிறார்கள். சமுத்திரக்கனி அந்த தவறுகளைச் சுட்டி காட்டுகிறார்.

மாணவர்களிடையே ஜாதி வேறுபாடு போன்ற பாரபட்சங்கள் இருக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்துகிறார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனியின் வழிகாட்டுதலால் பிளவுபட்ட மாணவர்கள் ஒன்று சேர்கின்றனர்.

சமுத்திரக்கனியின் செயல்களால் கோபமடைகிறார் தம்பி ராமையா. சமுத்திரக்கனியை எப்படியாவது கல்லூரியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார் தம்பி ராமையா.

இறுதியில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா செய்யும் சூழ்ச்சியிலிருந்து தப்பித்தாரா? ஒரு நல்ல கல்லூரி முதல்வராக தம்பி ராமையாவை மாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

சிறந்த வழிகாட்டிகள் இருந்தால் மாணவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு படக்குழுவினருக்கு பெரிய பாராட்டுகள்.

கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் சமுத்திரகனி. வசனங்கள் பேசும் போது பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார்.

மாணவர்களாக நடித்திருக்கும் யுவன், ஸ்ரீராம், அதுல்யா, கனிகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தம்பிராமையா மிரட்டலான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பியூனாக இருக்கும் ஜார்ஜ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் முதல் காட்சியிலிருந்தே சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வசனங்கள் மூலம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலைக்கு இப்படம் தேவையானது என்றே சொல்லலாம்.

‘அடுத்த சாட்டை’ மாணவர்களை ஒருபடி முன்னேற்றும் என்பது அசைக்க முடியாத உண்மை.

மொத்தத்தில் சமூகத்திற்கு தேவையானவற்றை அடுத்த சாட்டை மூலம் கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.